பக்கம் எண்: - 119 -

கண்ணனுடைய தாய் யசோதையின் அன்பு நெஞ்சத்தைப் புலப்படுத்தி ஆழ்வார் பாடியுள்ள பாடல்கள் மிக உருக்கமானவை. யசோதை தன் மகனைக் கன்று மேய்ப்பதற்காகக் காட்டிற்கு அனுப்பிவிடுகிறாள். பிறகு தன் செயலை நினைந்து வருந்துகிறாள். “மஞ்சள் பூசிப் பெண்களோடு இந்த ஆயர்பாடியில் திரிந்துகொண்டிருந்தான். பெண்களின் விளையாட்டு வீடுகளைச் சிதைத்து எங்கும் குறும்பு பல செய்து திரிந்துகொண்டிருந்தவனை, அவ்வாறு செய்யாதபடி வேடர்கள் வாழும் காட்டிற்குப் பசுக்கன்றுகளை மேய்ப்பதற்காக அனுப்பிவிட்டேனே! எதற்காக என் பிள்ளையை அனுப்பி விட்டேனோ? ஐயோ பாவமே” என்று தன்னைத்தான் நொந்து கொள்கிறாள். “அவனுக்கு என் மார்பின் பாலைத் தந்து வளர்த்த நான், அவனுடைய பொன்னடி நோக விடியற்காலையிலேயே காட்டிற்குக் கன்றுகளின் பின்னே என் இளஞ்சிங்கமாகிய கண்ணனை அனுப்பிவிட்டேன்!” “குடையும் செருப்பும் கொடுக்காமலே, பரல்கற்களை உடைய பொல்லாத காட்டிற்குள் கால் அடி நோகுமாறு கன்றுகளின்பின் என் பிள்ளையை அனுப்பிவிட்டேனே! கொடுமை செய்தேனே! ஐயோ பாவமே!”

பற்று மஞ்சள்பூசிப் பாவைமாரொடு பாடியில்
சிற்றில் சிதைத்து எங்கும் தீமைசெய்து திரியாமே
சுற்றுத் தூளியுடை வேடர்கானிடைக் கன்றின்பின்
எற்றுக்கு என்பிள்ளையைப் போக்கினேன்! எல்லே பாவமே!
 
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டஅப் பாங்கினால்
என்இளங் கொங்கை அமுதம்ஊட்டி எடுத்துயான்
பொன்னடி நோகப் புரியே கானில் கன்றின்பின்
என்இளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே!
 
குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனைநான்
உடையும் கடியன ஊன்றுவெம் பரற்கல் உடை
கடிவெங் கானிடைக் காலடி நோவக் கன்றின்பின்
கொடியேன்என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே!

கண்ணன் கன்றுகளை மேய்த்துத் திரும்பி வரும்போது யசோதை கண்டு மகிழும் மனநிலையை மற்றொரு பதிகத்தில் பாடியுள்ளார். “அக்கம் பக்கத்துப் பெண்களே! வந்து பாருங்கள், என் மகன் வரும் அழகை! இந்த உலகத்தில் இப்படி மகனைப் பெற்றவள் நான் ஒருத்தியே; வேறொருவரும் இல்லை” என்கிறாள். கண்ணனை அன்போடு வரவேற்று, “உன்னை இன்று கன்று மேய்க்கக் காட்டுக்கு அனுப்ப எனக்கு மனம் வந்ததே. என்னைவிடக் கல்மனம் உடைய ஒரு பெண் இருக்கமாட்டாள். கண்ணா! முத்தம் தா” என்கிறாள். “உடம்பெல்லாம் தூசாகிவிட்டதே! குளிப்பதற்கு நீர் எடுத்து