பக்கம் எண்: - 341 -

           வாழி கல்வி செல்வம் எய்தி
                மனம்மகிழந்து கூடியே
           மனிதர் யாரும் ஒருநிகர்
                சமானமாக வாழ்வமே.

உழவர்கள் பாடுகின்ற நாட்டுப் பாடலாகிய ‘பள்ளுப்பாட்டு’ என்ற வகையிலும் ‘சுதந்தரப் பள்ளு’ என்னும் பாடல் பாடியுள்ளார். அதிலும் இந்தச் சமத்துவ வாழ்வை வரவேற்றுப் பாடியிருக்கிறார்.

            பார்ப்பானை ஐயர்என்ற
                காலமும் போச்சே - வெள்ளைப்
           பரங்கியைத் துறைஎன்ற
                காலமும் போச்சே - பிச்சை
           ஏற்பாரைப் பணிகின்ற
                காலமும் போச்சே - நம்மை
           ஏய்ப்போருக்கு ஏவல்செய்யும்
                காலமும் போச்சே.
           உழவுக்கும் தொழிலுக்கும்
                வந்தனை செய்வோம் - வீணில்
           உண்டுகளித் திருப்போரை
                நிந்தனை செய்வோம்.

சிவாஜி தன் சேனைக்கு வீரஉணர்ச்சி ஊட்டிக் கூறும் மொழிகளாக ஒரு நீண்ட பாடல் பாடியுள்ளார். இராமலிங்க சுவாமிகளின் பாடலின் மெட்டைப் பயன்படுத்திக் கோகலேயின்மீது பாடியுள்ளார். கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் பாடல்களின் அமைப்பைப் பயன்படுத்திச் சில தேசீயப் பாடல்கள் பாடியுள்ளார். தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை அவருடைய நெருங்கிய நண்பர். சிதம்பரம் பிள்ளையின்மேல் ஆங்கிலேயர் தொடுத்த வழக்கைப் பாரதியார் நேரே கவனித்தவர்; சாட்சியும் சொன்னவர். நீதி மன்றத்தில் நீதிபதிக்கும் சிதம்பரம் பிள்ளைக்கும் நடந்த வாதத்தைப் பாடல்களாகப் பாடித் தந்துள்ளார்:

            சொந்த நாட்டில் பிரர்க்கடிமை செய்தே
                துஞ்சிடோம் - இனி - அஞ்சிடோம்
           எந்த நாட்டிலும் இந்த அநீதிகள்
                ஏற்குமோ - தெய்வம் - பார்க்குமோ?
           வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
                வாழ்த்துவோம் - முடி - தாழ்த்துவோம்
           எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல்
                ஈனமோ - அவ - மானமோ?