பக்கம் எண்: - 343 -

புலப்படுத்தினார். ‘அன்பே சிவம்’, ‘பரசிவவெள்ளம்’ என்ற மெய்யுணர்வு பாடல்கள் போற்றத் தக்க தெளிவும் சிறப்பும் உடையவை. கண்ணனை பற்றிக் கணக்கற்ற பாடல்கள் பாடினார். கண்ணனைக் குழந்தையாகப் போற்றினார்; சேவகனாகக் கற்பனை செய்து மகிழ்ந்தார்; நண்பனாகவும் குருவாகவும் காதலனாகவும் கவிதை யுலகத்தில் கண்டு கண்டு ஏத்தினார்; கண்ணம்மா என்ற காதலியாகவும் போற்றி மகிழ்ந்தார். தாயாகப் பாடினார்; தந்தையாகவும் கொண்டு பாடல் இயற்றினார். விளையாட்டுப் பிள்ளையாகப் பாடினார். கண்ணனைப்பற்றி அவர் பாடியுள்ள பாடல்களில் பெரியாழ்வாரின் பாடல்களின் கற்பனையும் மற்ற ஆழ்வார்களின் பாடல்களின் பக்தியுணர்வும் கலந்து புது மெருகு பெற்றுப் புதுவகை அழகோடு ஒளிர்கின்றன.

அவருடைய ‘விநாயகர் நான்மணி மாலை’யும், ‘தசாங்க’மும் இன்ன இன்ன செய்யுள் இத்தனை இத்தனை வரவேண்டும் என்ற பழைய மரபை ஒட்டி இயற்றப்பட்டவை. அவற்றில் சிற்சில இடங்களில்மட்டும் பொருளில் புதுமை அமைந்துள்ளது.

பாரதியாரின் பக்திப்பாடல்கள் நேரிய நடையில் அமைந்து உயர்ந்த உணர்ச்சியை ஊட்டுகின்றன. சக்தியை வழிபட்டுப் பாடும் பாடல்கள் புதிய ஒளியை நாட்டில் பரப்பின. ஊழிக் கூத்துப்பற்றிய பாட்டை உணர்ச்சியோடு பாடக் கேட்டால், காளியின் பயங்கரமான நடனத்தையே காண்பது போன்ற தனி உணர்ச்சி ஏற்படும். அதன் ஓசையமைப்பு அத்தகைய ஆற்றலுடையதாக இருக்கிறது. எங்கிருந்து வந்தாலும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் பரந்த மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக, அவருடைய யேசு கிறிஸ்து வணக்கப் பாடலும், அல்லா வழிபாட்டுப் பாடலும் உள்ளன.

ஞானப்பாடல்கள் என்ற பகுதி இன்றும் பலரால் விரும்பிப் படிக்கப்படுகின்றன. தெருவில் பண்டாரங்கள் பாடித் திரியும் மெட்டில் அமைத்து,

            அச்சம் இல்லை அச்சம் இல்லை
           அச்சம் என்பது இல்லையே
           இச்சகத் துளோர் எல்லாம்
           எதிர்த்து நின்ற போதிலும்
           அச்சம் இல்லை அச்சம் இல்லை
           அச்சம் என்பது இல்லையே

என்ற பாட்டை வீரம் ததும்பும் நடையில் பாடியுள்ளார்.

பாஞ்சாலி சபதம் என்னும் காப்பியத்தை இயற்ற அவர் விருத்தம் என்னும் செய்யுள் வடிவத்தையும் பயன்படுத்தியுள்ளார்; சிந்து என்னும் நாட்டுப் பாடல் வடிவத்தையும் பயன்படுத்தியுள்ளார். நொண்டிச்சிந்துக்குத் தம்