பாடல்களின்
வாயிலாகப் புதுவாழ்வும் மதிப்பும் கொடுத்து உயர்த்தியவர் பாரதியார். எளிமையான
நடையின் வாயிலாக உணர்ச்சிகளை ஆற்றலுடன் புலப்படுத்த முடியும் என்பதை அவற்றில் காட்டினார்.
அதனால், பாஞ்சாலி சபதம் மேடையில் இசைநாடகமாக நடிக்கப்படும்போது, மக்கள் நன்றாகப்
போற்றிச் சுவைக்க முடிகிறது. தருமன் சகுனியுடன் சூதாடும்போது நாட்டைப் பணயமாக வைத்து
இழக்கும் பகுதியைக் கூறும்போது, பாரதியார்க்கு அது பழங்கதையாக மட்டும் தோன்றவில்லை.
பாண்டவரின் நாடு சூதாட்டத்தில் இழக்கப்பட்டபோது, அவர் உள்ளத்தில் அடிமைப்பட்ட
பாரத நாட்டு உரிமையே வந்து நிற்கிறது. கதையை நிறுத்திவிட்டுக் கொதிக்கும் நெஞ்சத்தோடு
நீதி எடுத்துரைக்கிறார். நாட்டை ஆள்வோர் அந்த நாட்டு மக்களை உரிமையுள்ள மக்களாக
மதிக்காமல், ஆடுகளாக மதித்து, சூதாட்டத்தில் பணயமாக வைப்பது எவ்வளவு பெரிய அநியாயம்
என்று மிக வெறுத்துக் கூறுகிறார். அவருடைய உணர்ச்சியலைகளில் உவமைகள் பல பொங்கி
வருகின்றன.
கோயில் பூசை செய்வோர் - சிலையைக்க்
கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்போன் - வீட்டை
வைத்து இழத்தல் போலும்
ஆயிரங் களான - நீதி
அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்து இழந்தான் - சீச்சீ
சிறியர் செய்கை செய்தான்
நாட்டு மாந்தர் எல்லாம் - தம்போல்
நரர்கள் என்று கருதார்
ஆட்டு மந்தையாம் என்று - உலகை
அரசர் எண்ணி விட்டார்
காட்டும் உண்மை நூல்கள் - பலதாம்
காட்டினார் களேனும்
நாட்டு ராஜ நீதி - மனிதர்
நன்கு செய்யவில்லை.
பழைய கதையைச் சொல்பவர், இன்றைய உலக நாடுகளின் ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை
நினைந்து குமுறுகிறார்:
ஓரம் செய்தி டாமே - தருமத்து
உறுதி கொன்றிடாமே
சோரம் செய்திடாமே - பிறரைத்
துயரில் வீழ்த்திடாமே
|