ஊரை ஆளும் முறைமை - உலகில்
ஓர்புறத்தும் இல்லை
சாரம் அற்ற வார்த்தை - மேலே
சரிதை சொல்லுகின்றோம்.
சூதில்
திரௌபதியை வைத்து இழக்கும்போது பாரதியாரின் நெஞ்சில் அனல் வீசுகிறது. பாரதத்
தாயின் துயரத்தையே அந்தக் கதை நிகழ்ச்சியில் காண்கிறோம். இது என்ன கொடுமை
என்று சீறுகிறார்.
கேள்விப் பொருளினையே - புலைநாயின்முன்
வென்றிட வைப்பவர்போல்
நீள்விட்டப் பொன்மாளிகை - கட்டிப் பேயினை
நேர்ந்து குடியேற்றல்போல்
ஆள்விற்றுப் பொன்வாங்கியே - செய்தபூனை ஓர்
ஆந்தைக்குப் பூட்டுதல்போல்
கேள்விக்கு ஒருவர் இல்லை - உயிர்த்தேவியைக்
கீழ்மக்கட்கு ஆள் ஆக்கினான்.
செருப்புக்குத் தோல் வேண்டியே - இங்குக் கொல்வாரோ
செல்வக் குழந்தையினை?
விருப்புற்ற சூதினுக்கே - ஒத்த பந்தயம்
மெய்த்தவப் பாஞ்சாலியோ?
பாஞ்சாலியைச்
சூதில் வென்று துரியோதனன் அவளைச் சபைக்கு அழைத்துவருமாறு ஆணையிடுகிறான். அவன் தம்பி
துச்சாதனன் அவளுடைய கூந்தலைப் பற்றி இழுத்து வருகிறான். பாரதியார் கதையில் குறுக்கிட்டுப்
பேசுகிறார். அந்த அத்தினாபுரியாகிய பெரிய நகரத்தில் அப்போது அந்த வழியில் நின்று
கண்டவர்கள் மக்களா, உணர்ச்சியுள்ளவர்களா, உணர்ச்சியற்ற மரங்களா, துச்சாதனனை
மிதித்து உதைத்துத் தள்ளாமல் பார்த்திருந்தார்களே என்று கடுமையாகப் பழித்துப் பேசுகிறார்:
ஐயகோ என்றே அலறி உணர்வற்றுப்
பாண்டவர்தம் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான்; வழிநெடுக மொய்த்தவராய்
என்ன கொடுமைஇது என்று பார்த்திருந்தார்.
ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ?
வீரம்இலா நாய்கள்! விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தாரதலத்தில் போக்கியே
பொன்னை அவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்
|