பக்கம் எண்: - 346 -

           நெட்டை மரங்கள்என நின்று புலம்பினார்.
           பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ

இவ்வாறு பழித்துக் கூறும் சொற்களில், பாரத நாட்டை அடிமைப்படுத்திவிட்டு வெறும் பேச்சோடு வீண்காலம் கழிக்கும் உணர்ச்சியற்ற மக்களைப் பழிக்கும் ஆத்திரமும் புலப்படுகிறது. இறுதியில் பாண்டவரும் பாஞ்சாலியும் கூறும் சபத மொழிகளில், நாட்டு விடுதலைக்காக மக்கள் கூற வேண்டிய உறுதிமொழி உள்ளது எனலாம்.

இந்தப் பாடல்களைப் பாரதியாரே சிலமுறை பாடிச் சுவைத்திருப்பார். சில சிந்துகளுக்கு

            லாலல லாலல லாலல - லல
           லால லாலல லாலலா

முதலான மெட்டுகள் அமைத்துக் கொடுத்திருக்கிறார். “சம்பாஷணைகள் முதலியவற்றைத் திறனுடனும் உண்மையுடனும் காட்டுவதற்கு இப்பாட்டில் நடை மிகவும் ஸௌகர்யம் ஆதலைப் பாடிப் பார்த்து உணர்ந்துகொள்க” என்று அவரே குறிப்பும் எழுதி, நடை பயன்படும் சிறப்பை விளக்கியுள்ளார்.

           லால லாலலா லா லாலாலாலா
           லால லாலலா லா

என்ற மெட்டு உள்ள சிந்துகளை விளக்குமிடத்தில், “தெருவில் ஊசிகளும் பாசிமணிகளும் விற்பதோடு பிச்சை எடுக்கவும் செய்கிற பெண்கள் ‘மாயக்காரனம்மா - கிருஷ்ணன் - மகுடிக்காரன் அம்மா’ என்று பாடும் நடை; சூதாட்ட வருணனைக்கும் அதில் ஏற்படும் பரபரத்த வார்த்தைகளையும் செய்கைகளையும் விளக்குவதற்கும் இந்நடை மிகவும் பொருந்தியது என்பது எளிதிலே காணப்படும்” என்று பாரதியார் எழுதியிருக்கிறார். தெருவில் ஊசிவிற்றுப் பிச்சை எடுக்கும் பெண்கள் பாடும் பாட்டின் மெட்டையும் பாரதியார் கவனித்துப் போற்றியிருக்கிறார் என்பதும், அதன் கலைத்தன்மையும் தம் பாடல்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதும் இந்தக் குறிப்புகளால் விளங்குகின்றன. இவ்வாறு எளியநடையில் எழுதி எல்லாரும் படித்துப் பயன்பெறச் செய்யவேண்டும் என்ற அவருடைய ஆசையை அவர் பாஞ்சாலி சபதத்திற்கு எழுதிய முகவுரையாலும் அறியலாம்: “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகின்றான். ஓர் இரண்டு வருஷத்து நூற்பழக்கம் உள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்கு உள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும். . . தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு தர வேண்டும் என்ற கங்கணம் கட்டி நிற்கும்