பராசக்தியே
என்னை இத்தொழிலிலே தூண்டினாள் ஆதலின், இதன் நடை நம்மவர்க்குப் பிரியம் தருவதாகும்
என்றே நம்புகிறேன்” என்று எழுதித் தம் இலக்கியத் தொண்டின் ஆசையை விளக்கினார்.
குயில்பாட்டு ஒரு கற்பனைக் களஞ்சியம்; காதல்பற்றிய புதிய படைப்பு. அதில் வரும்
தலைவன் கவிஞரே; அவருடைய காதலே குயில். புதுச்சேரியில் ஒரு மாஞ்சோலையில் இயற்கைச்
சூழலில் குயில் காணப்படுகிறது; அதன் இனிய குரலின் இசை சோலையிலே பரவுகிறது. மின்னலின்
சுவை மெல்லியதாய் இனிமையானதாய்ப் பரவுவதுபோல் உள்ளதாம். நனவுலகம் மறைந்து, கவிஞர்
கனவு காணத் தொடங்குகிறார்:
இன்னமுதைக் காற்றினிடை எங்கும் கலந்ததுபோல்
மின்னல் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய்
வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்
இந்தஉரு எய்தித்தன் ஏற்றம் விளக்குதல்போல்
இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைகளை
முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவுஅழியப்
பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன் யான்.
இப்படிக்
கவிஞரின் கனவிலே தொடங்குகிறது குயில்பாட்டு. கவிஞர் தம் மனிதஉரு நீங்கிக் குயில்
உருவம் வாராதோ என்று ஏங்கும் அளவிற்கு அந்தக் குயிலின் இசை அவருடைய உள்ளத்தை உருக்கிவிடுகிறது.
குயிலின் மேல் காதல் வளர்கிறது. அந்தக் குயிலோடு கூடி வாழ ஆசைப்படுகிறார். குயிலின்
இசையாகிய கனவில் தம் உயிரைப் போக்க வேண்டும் என்று விரும்புகிறார். கனவிலே குயில்
பேசுகிறது. தன் பழைய பிறப்பின் நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறுகிறது. தன் கதை எல்லாம்
சொல்லி முடித்தபின் குயில் கவிஞருடைய கையில் வீழ்கிறது. கவிஞர் அதை முத்தமிடுகிறார்.
உடனே குயில் மறைய, பெண் ஒருத்தி அங்கே நிற்கிறாள். “இவள் அழகை எப்படித்
தமிழில் சொல்வேன்!” என்று கவிஞர் திகைக்கிறார். சொல்ல முயல்கிறார்;
கவிதையாகிய பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து, இசை நாட்டியம் என்னும் கலைகளின் சாரத்தை
அதனோடு சேர்த்து இனிய அமிழ்தத்தையும் கலந்து, காதல் என்னும் வெயிலில் உலர்த்திக்
கட்டியாக்கி அதனால் செய்யப்பட்டதே அந்தப் பெண்ணின் மேனி என்கிறார். உடனே கவிஞரின்
கனவு கலைகிறது. கண்விழித்துப் பார்க்கிறார்.
பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி எழுதுகோல்
|