பக்கம் எண்: - 348 -

           பத்திரிகைக் கூட்டம் பழம்பாய் வரிசை எல்லாம்
           ஒத்திருக்க ‘நம்வீட்டில் உள்ளோம்’ என உணர்ந்தேன்

இவ்வாறு மீண்டும் நனவுலகிற்கு வருகிறார் கவிஞர் (தம் வறுமையின் அடையாளமான பழைய பாயையும் நமக்குக் காட்டுகிறார்). இவ்வாறு அமைந்த குயில் பாட்டு, கற்பனைச் சுவை மிகுந்த புதுவகைக் கவிதையாக உள்ளது.

பாரதியாரின் புரட்சி மனப்பான்மை - சீர்திருத்த மனப்பான்மை - அவருடைய வாழ்வில் விளங்கியதுபோலவே பாடல்களிலும் தெளிவாகிறது. அரிஜனர் ஒருவரிடம் அந்தக் காலத்திலேயே புதுச்சேரியில் தம் உறவினர்போல் ஆர்வம்கொண்டு அன்பு செலுத்தினார். அவருக்குப் பூணூல் அணிவித்து அன்றுமுதல் அவரைப் பிராமணர் என்று பாராட்டினார். குழந்தைகளுக்காக எழுதிய பாப்பாப் பாட்டில், அந்த இள மனங்களில் சாதி வேறுபாடு வேரூன்றக்கூடாது என்ற உயர்ந்த நோக்கம் கொண்டு,

            சாதிகள் இல்லைஅடி பாப்பா - குலத்
           தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

என்று பாடினார்.

பாரதியாரின் உரைநடையில் அமைந்த பாட்டுப் போன்ற கருத்துக்கோவைகளும் கற்பனைச்சொல்லோவியங்களும் பல உள்ளன. அவை அல்லாமல் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உள்ளன. அவர் அவ்வப்போது தாம் நடத்திய இதழ்களுக்காக எழுதிய பலவகைக் கட்டுரைகளும் சுவையானவை. அவற்றுள் பல இன்றும் இலக்கியச் செல்வமாக வாழும் தகுதி படைத்தவை.

            தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல்,
                சிந்திப் பார்க்கே
           களிவளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல
                காட்டல், கண்ணீர்த்
           துளிவளரஉள் உருக்குதல்இங்கு இவைஎல்லாம் நீ அருளும்
                தொழில்கள் அன்றோ
           ஒளிவளரும் தமிழ்வாணி! அடியனேற்கு இவைஅனைத்தும்
                உதவு வாயே

என்று கலைமகளிடம் பாரதியார் வேண்டினார். வேண்டியவாறே பெற்றார். தெளிவாக அறிதல், தெளிவாக மொழிதல், கற்பவரின் உள்ளத்தைக் களிப்பித்து உருக்குதல் என்னும் அந்தப் பண்புகளைப் பாரதியாரின் செய்யுள்நடையில் காண்பதுபோலவே உரைநடையிலும் காணலாம். எங்கும் உணர்ச்சி, எங்கும் தெளிவு, எங்கும் புதிய வேகம், எங்கும் உயர்ந்த நோக்கம்