பக்கம் எண்: - 350 -

சதையும் சத்தும் தந்து புத்துயிர் ஊட்டுகிறார் கவிஞர். ஒரு பகுதி வருமாறு:

            திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும்
           திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும்
           அஃகஃக கும்பிட்றேன் அல்லா ருக்கும்
           அஃகஃக வரிஞ்சலா அமந்திருங்க
           மக்களெ பெத்த மகராசருங்க......

           என்னடா தம்பி?
           ஏண்டா அண்ணா?
           இதோபார் தம்பி எலும்புக் கூடு!
           சதையும் இல்லே சத்தும் இல்லே
           ஆமாம் திடுதிடும் அதுக்குப் பேர்என்னா?....
           இந்த மருந்துக்கு என்னா பேரு?
           உள்ளே தொட்டா உசிரில் இனிக்கும்:
           தெள்ளுதமிழ் தம்பி தெள்ளுதமிழ் இதுதான்!
           இந்த மருந்தே எலும்புக் கூட்டில்
           தடவுறேன் தம்பி அடிமோ ளத்தை!
           திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும்!

           சிரித்தது பாரடா செந்தமிழ் கூடு!
           விரிந்தது பாரடா அழிந்தநம் நாடு!
           பாடுது பாரடா பைந்தமிழ் நாடு!
           தாயி மாரே தகப்ப மாரே
           மாயம்இல்லே மந்திரம் இல்லே
           கருத்து வேணும் நம்ப
           வருத்தம் நீங்க தேடணும் வழியே!

இந்த வகையான மொழி உணர்ச்சியையும் தமிழ்நாட்டு உணர்ச்சியையும் அவர் கணக்கற்ற பாடல்களின் வாயிலாக ஊட்டியிருக்கிறார். தனி நூலாகவும் ‘தமிழ் இலக்கியம்’ என்று இவ்வகையான பாடல்கள் வெளிவந்துள்ளன.

பொதுவுடமையை என்னும் புதுக்கொள்கையை வரவேற்கும் ஆர்வம் அவருடைய பாடல்களில் நிரம்பக் காணலாம். உழைப்பாளிகள் நிமிர்ந்து வாழும் வாழ்வை ஆர்வமுடன் வரவேற்றுப் பாடும் கவிஞர் அவர். பூஞ்சோலைகளைப் பார்த்ததும் நன்செய் வயல்களைப் பார்த்தும், தாமரைத்தடாங்களைப் பார்த்தும் கேட்கிறார்; “உங்களை எல்லாம் இவ்வாறு அமைந்தவர்கள் யார்? உழைத்துப் பாடுபட்ட தொழிலாளிகள்தானே?” என்கிறார்.