சித்திரச் சோலைகளே - உமை நன்கு
திருத்தஇப் பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனர்
ஓஉங்கள் வேரினிலே.
நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
நெல்விளை நன்னிலமே - உனக்கு
எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே.
தாமரை பூத்த தடாகங் களேஉமைத்
தந்தஅக் காலத்திலே - எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.
நீண்ட
பெருஞ்சாலைகளை அமைக்க அந்திப்பொழுது வரையில் உழைத்தார்கள் எத்தனையோ தொழிலாளர்கள்!
யந்திரப் பெருந்தொழிற்சாலைகளை அமைக்க அவர்கள் உடல் வருந்திப் பாடுபட்டார்கள்!
அந்தப் பாதைகளையும் யந்திரங்களையும் விளித்துப் பாடுகிறார். கடைசியில் உலகைப்
பார்த்தே கேட்கிறார்; “உலகமே! நீ சாட்சி அல்லவா! இப்போது செல்வர்கள்
அதை உணராமல் வாழ்கிறார்கள். அது நீதியா?” என்று பாடுகிறார்.
தாரணியே தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீ அன்றோ? - பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ?
இனிக்
காலம் மாறிவிட்டதாம்; முன்போல் உழைப்பாளிகள் செல்வர்களிடம் கெஞ்சிக் கேட்கப்போவதில்லையாம்;
பயம் நீங்கி விட்டதாம்.
கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும் உத்தேசம் இல்லை - சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசம் இல்லை.
“புதிய
உலகை அமைப்போம்! பழைய சீர்கெட்ட அமைப்பை அழிப்போம்” என்று எழுச்சியுடன் பாடுகிறார்.
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
|