பக்கம் எண்: - 352 -

பாண்டியன் பரிசு என்ற சிறு காப்பியத்தில், வருங்கால உலகைக் கற்பனை செய்து பாடுகிறார்:

            எல்லார்க்கும் எல்லாம்என்று இருப்ப தான
                இடம்நோக்கி நடக்கின்றது இந்த வையம்
           கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
                கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்
           நல்லோரே எல்லாரும் அவ்வை யத்தில்
                நமக்கென்ன கிழியட்டும் பழம் பஞ்சாங்கம்!

பழைய கண்மூடி வாழ்க்கையைப் பழம் பஞ்சாங்கம் என்கிறார். அது கிழிந்து ஒழிவதைப்பற்றிக் கவலை இல்லை என்கிறார்.

சாய்ந்த தராசு என்னும் பாடலிலும், பலர் வாடச் செய்து சிலர் இன்பமாய் வாழும் கொடுமையைக் கடிந்து பாடியுள்ளார். பலர் ஏழையப்பராம்; ஓடப்பராம்; சிலர் உயரப்பராம். ஏழையப்பர் எல்லாரும் உதையப்பர் ஆகிவிட்டால், ஓடப்பர், உயரப்பர் எல்லாரும் ஒப்பரப்பர் ஆகிவிடுகிறார்களாம்.

‘தளை அறு’ என்பதும் அழகான பாடல். உழைப்பவர்கள் நீர் நிரம்பிய கடலைப் போன்றவர்களாம். உழைப்பின் பயனை நுகர்வோர், கடலில் மிதக்கும் ஓடங்களைப் போன்றவர்களாம். புயல் வந்து மோதுமானால், ஓடங்களின் கதி என்னவாகும்? அதை உணர வேண்டுமே என்று பாடுகிறார்.

மூட நம்பிக்கையைுயும் கண்மூடிப் பழக்கங்களையும் ஆத்திரம் கொண்டு எதிர்த்து வந்தவர் பாரதிதாசன். சாதி வேற்றுமையைப் பெரிய கொடுமை என்று சாடியவர் அவர். “இருட்டறையில் உள்ளதடா உலகம்; சாதி இருக்கின்றது என்பவனும் இருக்கின்றானே” என்று கொதிப்புற்றவர் அவர். குழந்தைகளுக்குத் தாலாட்டு என்ற வகையில் பாடிய பாட்டிலும் இந்த எதிர்ப்புணர்ச்சியை அமைத்து “மூடத்தனத்தைப் போக்கி நல்ல சமுதாயத்தை ஆக்குவதற்குப் பிறந்த குழந்தை அல்லவா நீ!” என்று பாடுகிறார்.

            மூடத் தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
           காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே.

           வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
           தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!

இது பெண் குழந்தைத் தாலாட்டு. ஆண்குழந்தைத் தாலாட்டு வேறு பாடியுள்ளார். அங்கும் இந்தப் புத்துணர்ச்சியை ஊட்டுகிறார். மூடநம்பிக்கையில் ஆழ்ந்துள்ளவர்கள் மாடுகளாம். அந்த மாடுகளை அடக்கித் திருத்தவந்த வீரக்குழந்தையாம் அது!