பக்கம் எண்: - 353 -

           வாடப் பலபுரிந்து வாழ்வை விழலாக்கும்
           மூடப் பழக்கத்தைத் தீது என்றால் முட்டவரும்
           மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த
           ஈடற்ற தோளா ! இளந்தோளா ! கண்ணுறங்கு.

சில செய்யுள் நாடகங்களையும் கவிஞர் இயற்றியுள்ளார். அவற்றிலும் புதுமைக் கருத்துகளை அமைத்துப் பழைய தீமைகளை எதிர்த்துத் தாக்கியுள்ளார். கடவுள் நம்பிக்கை அற்ற அவர், பழைய சமய நம்பிக்கைகளையும் எதிர்த்து எழுதியுள்ளார்.

முதல்முதல் வெளியான அவருடைய கவிதைத் தொகுப்பு ‘பாரதிதாசன் கவிதைகள்’ என்பது. அந்தப் பாடல்களில் அவர் பாரதியாரை அடியொற்றிப் பாடியிருக்கிறார். அவற்றில் விழுமிய உணர்ச்சிகளையும் நோக்கங்களையும் காணலாம். உலகம் ஒரு குடும்பம் என்ற பரந்த பார்வையையும் காணலாம். ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்னும் சிறு காப்பியத்தையும் அதில் சேர்த்துள்ளார். பிற்காலத்தில், தமிழின் உணர்ச்சியும் வீர முழக்கமும் மிகுந்த ‘பாண்டியன் பரிசு’, ‘தமிழச்சியின் கக்தி’, ‘வீரத்தாய்’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘காதலா கடமையா’ என்னும் அரிய காப்பியங்கள் பலவற்றை படைத்தார்.

‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’ இரண்டும், தேர்ந்த படைப்புகள். கவிஞர் நல்ல குடும்பத்தின் அமைதியான இன்ப வாழ்வைப் பார்த்து மகிழும் காட்சியை முன்னதில் காணலாம். பின்னதில், அன்பான குடும்பத்திற்கு ஆகாதவற்றைக் கற்பனை செய்து காட்டுகிறார். கற்பனைகள் எல்லாம் வாழ்வை ஒட்டிய கற்பனைகளே; வெறுங் கற்பனைகள் அல்ல.

‘அழகின் சிரிப்பு’ என்ற தொகுப்பு தமிழிலக்கியத்திற்கு அழகு செய்யும் பாடல்களைக் கொண்டது. எல்லாம் இயற்கையின் அழகைப் பாடுவனவே; இயற்கையை அதன் அழகு விருந்துபற்றியே போற்றிப் பாடும் தமிழ்ப் பாடல்களில் அவற்றிற்கு இணையானவை இல்லை எனலாம். அழகுநங்கை களிநடம் புரியும் இடங்களைக் கவிஞர் அடுக்கிக் கூறுகிறார். ஒரு பாடல் காண்போம்.

            சிறுகுழந்தை வழியினிலே ஒளியாய் நின்றாள்
                திருவிளக்கில் சிரிக்கின்றாள் நாரெ டுத்த
           நறுமலரைத் தொகுப்பாளின் விரல்வ ளைவில்
                நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோள்
           புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
                புதுநடையில் பூரித்தாள் விளைந்த நன்செய்
           நிறத்தினிலே என்விழியை நிறுத்தி னாள்என்
                நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.