இவ்வாறு
அழகைப் பாடும் இடங்களிலும் கவிஞர் உழைப்பாளியாகிய உழவனை மறக்கவில்லை. தோளில்
கலப்பை ஏந்தி உழவன் நடக்கும் நடையில் புதுமை உள்ளதாம். அந்தப் புதுநடையில் அழகுப்பெண்
பூரிப்பு அடைகின்றாளாம்.
தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழினம் என்று உணர்ச்சியுடன் பாடிய கவிஞர்க்கு உலக நோக்கமும்
குறைவில்லாமல் இருந்தது. உலக நோக்கம் என்று உணரும்போது, வீடு, தெரு என்ற எல்லைகள்
போல் நாடும் சிறிய எல்லையாகிவிடுகிறது. மனிதன், மனிதர் என்ற எண்ணம் மேலோங்க
வேண்டுமாம். இந்த உயர்ந்த எல்லையில் ஏறி நின்று, உலகில் உள்ள மனிதப் பரப்பை
- கடல்போன்ற மனித சமுதாயத்தைப் பார்க்க வேண்டுமாம்.
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு, விடாமல் ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா இப்புவி மக்களை
எங்கும் பாரடா இப்புவி மக்களை;
பாரடா உனதுமானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம் . . .
மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள் . . .
மானிட சமுத்திரம் நான் என்று கூவு.
சாதி
சமயம் குலம் இனம் நிறம் நாடு முதலான எல்லாப் பிரிவுகளையும் கடந்து நோக்கும் உலக
நோக்கத்தை மிக அழகாக, எளிய சொற்களில் உணர்ச்சி ஊட்டி உரைக்கிறார்.
பாரதிதாசனுடைய நடை அவருடைய உள்ளம் போலவே, வேகம் மிகுந்தது; பொருள் விளங்காத
அருஞ்சொற்கள் அவருடைய பாடல்களில் இல்லை; எல்லாம் பலரும் வழங்கும் எளிய சொற்களே!
அந்தச் சொற்களுக்கு அவர் ஊட்டும் வேகத்தையும் ஆற்றலையும் என்ன என்பது! எதையுமே
உள்ளத்து உணர்ச்சி இல்லாமல் சொல்ல அறியாதவர் அவர்! எதையாவது வெறுத்தால், மிகக்
கடுமையாக வெறுத்துத் தள்ளுவார்; பழித்தால் மிகக்கடுமையாகப் பழிப்பார்; அவருடைய
தாக்குதல், வாள் வீச்சைவிடக் கடுமையானது. இவ்வளவு வேகமும் கடுமையும் ஆற்றலும் நிரம்பிய
பாடல்கள், பழைய மரபாக வந்த எளிய விருத்தங்கள்; அல்லது எளிய சிந்துமெட்டுகள்;
அல்லது சிறுசிறு கண்ணிகள்; எளிய பாட்டு வடிவங்களை இவ்வளவு வேகமான உணர்ச்சிகளுக்குப்
பயன்படுத்திய அவருடைய திறன் போற்றத்தக்கது.
அவர் இசையுலகத்திற்காகப் பாடிய பாடல்களும் சில உள்ளன. இசை நல்ல வடிவத்தில் புலப்படுத்துமாறு
அந்தப் பாடல்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சில பாடல்களில் குழைவும் இனிமையும் உள்ளன.
சிறப்பாக, காதல் பாடல்கள் அத்தகையவை.
|