பக்கம் எண்: - 371 -

           வாலை முறுக்குதுபார் - வால்நுனி
                வட்டம் சுழலுது பார்
           சாலப் பதுங்குது பார் - நம்மீது
                சாடவும் நோக்குது பார்

           இடித்து  முழங்குதடி - தொண்டையும்
                இரும்பாலே செய்ததோடி
           அடுத்து நெருங்காதேடி - அதுமிக
                ஆங்காரம் கொள்ளுதடி.

தாலாட்டுப் பாட்டு, தலைமுறை தலைமுறையாகத் தமிழ்ப் பெண்கள் தம் குழந்தைகளுக்காகப் பாடிவரும் குடும்பப் பாட்டு, அதற்குத் தேசிகவிநாயகம் பிள்ளை புதிய மெருகும் புதிய அழகும் தந்து அதனிடையே உயர்ந்த நோக்கங்களையும் புகுத்தியுள்ளார்:

            ஆராரோ ஆராரோ
                ஆரிவரோ ஆராரோ
           கல்லைப் பிசைந்து
                கனியாக்கும் செந்தமிழ்
           சொல்லை மணியாகத்
                தொடுத்தவனும் நீதானோ?