பக்கம் எண்: - 370 -

இரண்டு வயது உள்ள குழந்தைகளுக்கு அவை பாடப்படுகின்றன. குழந்தைகள் ஏழு எட்டு வயது உள்ளவர்களாக வளர்ந்த பிறகும், ‘சின்ன சின்ன எறும்பே சிங்கார எறும்பே’ என்று இவ்வாறு ஒலிகளும் சொற்களும் திரும்பிவருவதை விரும்புகிறார்கள். இதை உணர்ந்து, குழந்தைகளுக்காகப் பாடும் கவிஞர்கள், ஒலிநயம் அமையப் பல பாடல்கள் பாடிவருகிறார்கள். 1947-ஆம் ஆண்டுமுதல் 1952-ஆம் ஆண்டுவரையில் குழந்தைகளுக்காகப் பல இதழ்கள் தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளன. அவற்றில் அப்படிப்பட்ட பாடல்கள் பல வெளிவந்தன. சிறுவர் படித்து மகிழும்படியான எளிய நடையில் அவை அமைந்தன. நமச்சிவாய முதலியாரின் முறையைப் பின்பற்றி மயிலை சிவமுத்து முதலான புலவர்கள் எளிய பாடல்கள் இயற்றினார்கள். அவர்களுக்குப் பிறகு அந்தத் துறையில் தொண்டு செய்து பல பாடல்கள் தந்தவர் அழ. வள்ளியப்பா. குழந்தை இலக்கியம் வளர்ப்பதையே வாழ்நாள் தொண்டாகத் கொண்டவர் அவர். ‘மலரும் உள்ளம்’ என்ற தலைப்பில் இரண்டு பெரிய நூல்களில் அவருடைய பாடல்கள் உள்ளன. கதைகளாக அமைந்த பாடல்களைக் குழந்தை மனம் மிக விரும்பும் என்று அறிந்து, பல செய்யுட் கதைகளையும் படைத்துள்ளார். பெ. தூரன் இனிய இசைநயம் வாய்ந்த குழந்தைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

பறவைவிலங்குகளிடம் குழந்தை மனம் மிகுதியாக ஈடுபடும். தீராத ஆசை கொண்டு பறவைவிலங்குகளைக் குழந்தைகள் கண்டு மகிழ்வார்கள். அவர்களின் கற்பனையுள்ளத்தில் பதியும் வகையில் பறவைவிலங்குகளைப் பாடிய பாடல்களையும் குழந்தைகள் போற்றி வருகிறார்கள். அழ. வள்ளியப்பாவின் வெள்ளை முயல், அணில் பற்றிய பாடல்கள் அவ்வாறானவை. கிளி, காக்காய், பசு, கடிகாரம், கோழி, நாய், ஆகாயவிமானம், சைக்கிள், பொம்மைக் கலியாணம், எலிக் கலியாணம், பசுவும் கன்றும் முதலிய தேசிக விநாயகம் பிள்ளையின் குழந்தைப் பாடல்கள் மிகச் சுவையான முறையில் அமைந்துள்ளன. இயல்பாகவே எளிய நடையில் தேர்ந்த இந்தக் கவிஞரின் உள்ளம், குழந்தைகளுக்காகப் பாடும்போது மேலும் நெகிழ்ந்து குழைந்துவிடுகிறது. உயிர்க்காட்சிச் சாலையில் புலிக்கூண்டைச் சிறுமியர் சிலர் பார்த்து வியப்பதாகவும் மருண்டு கூறுவதாகவும் அமைந்த பாட்டு, வளர்ந்த பெரியவர்களின் உள்ளத்தையும் தொடுகிறது:

பந்தம் எரியுதோடி - கண்களைப்
                பார்க்க நடுங்குதடி
       குந்தம்வாள் ஈட்டிஎல்லாம் - கூடவே
                கொண்டு திரியுதடி