முனைவர் மு. தமிழ்க்குடிமகன்
முன்னாள் அமைச்சர்
தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு          
இந்து சமய மற்றும் அறநிலையத் துறை

தலைமைச் செயலகம்
சென்னை- 600 009
தி.பி.2031, ஆனி 10.

 

ஐந்தாம் பதிப்பின் அணிந்துரை

சிறந்த வரலாற்றாசிரியராகிய பேராசிரியர் கே.கே.பிள்ளை அவர்கள்
எழுதிய “தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்” என்ற நூல் நீண்ட
காலமாகவே வரலாற்றுலகில் சிறப்பான பெயரைப் பெற்றதாகும். இந்த
நூலின் சிறப்பினைக் கருதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபடியும்
இந்த நூலினை வெளியிடுகிறது. தமிழ் வளர்ச்சித்துறை இதற்கென
நிதியுதவியும் செய்துள்ளது.

இப்போது தமிழக அரசின் சார்பில் ‘தொல் பழங்காலம்’ தொடங்கி
‘பாண்டியப் பெருவேந்தர் காலம்’ வரை எட்டுக்கும் மேற்பட்ட வரலாற்று
நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வரலாற்று நூல்களுக்கெல்லாம்
பிள்ளை அவர்களின் வரலாற்று நூல்கள் வழிகாட்டியாக அமைந்துள்ளன
என்றால் மிகையாகாது. வரலாற்றை எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கு
அவரே ஒரு விளக்கம் சொல்கிறார். “அரசர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை
மட்டும் விளக்கிக் கூறும் வரலாறுகள் இன்று செல்வாக்கிழந்து விட்டன.
மன்னர்கள் ஒருவரோடொருவர் பூசலிட்டுப் போராடி, மாண்டுபோன
செய்திகள் மக்கள் மனங்களுக்குப் புளித்துவிட்டன. நாட்டு மக்களின்
வாழ்க்கை முறைகள், பண்பாடுகள் முதலியவற்றைப் பற்றிய ஆராய்ச்சியை
மேற்கொள்ள வரலாற்று ஆய்வாளரிடம் ஆவல் மேலிட்டு வருகின்றது.”