வாய்ப்பு நேருமாயின் 'விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு' என்னும் தலைப்பிலே ஒரு நூல் எழுத எண்ணியுள்ளேன். விடுதலைக்குப் பின் தமிழ் வளர்த்த தேசிய பாரம்பர்யத்தினரில் யான் சார்ந்துள்ள தமிழரசுக் கழகத்தின் ஊழியர்களுக்குச் சிறப்பான இடமுண்டு. விடுதலைக் கதிரவன் தோன்றுவதற்கு முன்பே தமிழரசுக் கழகம் பிறந்து விட்டது . அதனால , இந்நூலின் இறுதி அத்தியாயத்திலே அக்கழகம் பற்றிச் சுருக்கமாகவேனும் சொல்லியாக வேண்டிய கடமை ஒரு சரித்திராசிரியன் என்ற வகையில் எனக்குஉண்டு . அந்த அளவில் தான் தமிழரசுக் கழகத்தைப் பற்றி இறுதி அத்தியாயத்தில் சிறிதளவு குறிப்பிட்டுள்ளேன். நெஞ்சை நடுவு நிலையில் நிறுத்தி விருப்பு வெறுப்பின்றி விமர்சனம் செய்யுங்கால் , அரசியல் கட்சிகளிடமோ , தனி நபர்களிடமோ காணப்படும் குறைபாடுகள் ஒளிவு மறைவின்றி , எடுத்துக்காட்ட வேண்டிய கடமை சரித்திர எழுத்தாளனுக்கு உண்டு . அந்தக் கடமைப்படி இந்நூலில் சில இடங்களில் கண்டிப்பான விமர்சனத்தைக் கடைப்பிடித்துள்ளேன் என்பதனை இங்கு நினைவூட்டி , நூலுக்குள் நுழையு முன்பே வாசகர்களை எச்சரித்துவிட விரும்புகின்றேன். செங்கோலில் சுமார் ஓராண்டுகாலம் யான் எழுதிய தொடர் கட்டுரையையே நூலாக்கியுள்ளேன் . அதனால் ஆங்காங்கு 'கூறியது கூறல்' என்ற குறை காணப்படலாம் . அந்தக் குறை எடுத்துக் காட்டப்படின் அடுத்த பதிப்பில் நீக்கப்படும். வழக்கமாக என்னுடைய நூல்களை வெளியிட்டுவரும் திரு. சோம. சுவாமிநாதன் அவர்களின் 'இன்பநிலைய'மே இந்த நூலையும் வெளியிட முன்வந்தது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். விடுதலைப் போராட்ட காலத்தில் வேங்கடத்திற்கு வெளியேயுள்ள பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் அடைந்த வளர்ச்சி பற்றியும் ஆங்காங்கே தொட்டுக் காட்டியுள்ளேன். அந்தக் குறிப்புகள் ஆங்கில நூல் களிலிருந்து திரட்ட என்னுடைய அருமை நண்பர் திரு.பெ.சு.மணி அவர்கள் உதவி புரிந்தார். அவருக்கு என நன்றி உரித்தாகுக. பொதுவாக, தமிழ் வளர்த்த தேசபக்தர்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து நூலாக்கும் புனிதப் பணியில் என்னை ஈடுபடுத்திய இறைவனுக்கு நன்றிசெலுத்துகின்றேன். தமிழ் வாழ்க! |