பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 1

          தமிழ்மொழி உரிமை இழந்த வரலாறு

      பாரதத்  திருநாடு  சற்றேறக்குறைய  ஒன்றரை நூற்றாண்டுக்  காலம்
ஆங்கிலப்  பேரரசுக்கு  அடிமைப்பட்டிருந்தது  . ஆங்கிலேயர் ,   பிறந்த
நாட்டாலும் பெற்ற நிறத்தாலும் பேசும்மொழியாலும் பாரதத்திற்கு  முற்றிலும்
அன்னியராவர் . அவ்வன்னியர் , நம்  அரசுரிமையைப்   பறித்ததோடன்றி,
நம்முடைய  விழியினும்  சிறந்த மொழியுரிமையையும்  பறித்தனர் . இந்திய
நாட்டிலே, "எங்கும் எதிலும் ஆங்கிலம்"  என்ற   நிலையை  ஏற்படுத்தினர்.

     ஆட்சியிலே, துறைதோறும் ஆங்கிலம் ;  கல்வியி்லே  பாடந்தோறும்
பயிற்றுமொழி  ஆங்கிலம் ; நீதி   மன்றங்களி்லேயும்   நிருவாக   மொழி
ஆங்கிலம்.இப்படி, அங்கிங்கெனாத படி பாரதத்திலே எங்கெங்கும்  தங்கள்
மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர். அதனால், படித்தவர்களிடையே
தாய்மொழிப்  பற்றுத்  தேய்பிறையாகி , ஆங்கில மோகம்  வளர்பிறையாக
வளர்ந்து வந்தது . சந்து முனையிலேயும் சந்தைக் கடையிலேயும்   குழாயடி
யிலேயும் இலக்கண  வழுவோடு  பேசப்படும் கொச்சைத் தமிழே   வாழ்வு
பெற்றது. அறிவியற் புலவர்களின்  வாய்மொழி அவர்கள் தாய்  மொழியாக
இல்லாத கொடுமை கோலோச்சியது.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!

      அகிலத்தை - அண்ட  சராசரங்களைப்   படைக்கவும்   காக்கவும்
அழிக்கவும்  ஆற்றல்  பெற்ற  இறைமையைக்கூட  இனந்தெரிந்து  கூறும்
திறனுடையது நம் தாய்மொழி. இதனைக் குமரகுருபரசுவாமிகள்  சுவைபடக்
கூறுகின்றார். இறைவன்ஆண்பாதி-பெண்பாதியான அர்த்தநாரி   வடிவிலே
தோன்றி ,  " செந்தமிழ்ப் புலவனே !  இப்பொழுது   என்னை    எப்படி
அழைப்பாய்?" என்று கேட்பது போலவும், தாம் அதற்கு   வி்டையளிப்பது
போலவும் ஒரு செய்யுளை அமைத்துள்ளார். அது வருமாறு:

  ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருவொன் றால்அவ்
    உருவையிஃது ஒருத்தன் என்கோ ஒருத்தி என்கோ
  இருவருக்கும் உரித்தா வொருவர் என்றோர்
    இயற்சொல் இலதெனின் யான்மற்று என்சொல்கேனே!.1


1. சிதம்பரச் செய்யுட் கோவை