பரம்பொருளே பால்மயக்கங் காட்டிக் காட்சியளித்தாலும் அப் பொருளையும் பெயரிட்டழைக்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்கிறார் குமரகுருபரர் . ஆண்பாதி - பெண்பாதியாக ஒரு வடிவம் தோன்றினால், அந்த வடிவை 'ஒருத்தன்' என்பதா? 'ஒருத்தி' என்பதா?-என்ற வினாவினை எழுப்பி, 'ஒருத்தர்' என்ற சொல்லால் சுட்டிக் காட்ட முடியும் என்று விடை தருகிறார். அத்தகு ஆற்றல்மிக்க மொழி , " இறைவனால் படைக்கப்பட்ட அகிலத்தின் -அண்ட சராசரங்களின் நிலைகளையும் நியதிகளையும் கூறும் திறனற்றது . என்றனர் பரதேசிகளாய் வந்த பறங்கியர்கள் .படைத்தவனின் ஆற்றலையே அளந்து காட்டிய மெய்ஞ்ஞானியர்களைத் தோற்றுவித்த நம் தாய்மொழி, அவனால் படைக்கப்பட்ட பொருள்களின் ஆற்றலை அளந்து கூறும் விஞ்ஞானியர்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் அற்றது என்றனர், நம்மவர்களிலேயும் சிலர். இந்த அவலநிலை - ஆங்கில மொழியின் ஆதிக்கக் கொடுமை - ஆங்கிலேயர் இந்த நாட்டில் புகுந்த அரை நூற்றாண்டுக் காலத்திற் குள்ளேயே குமரிமுதல் இமயம்வரை பரவி விட்டது . பிரதேச மொழி ஒவ்வொன்றும் உரிமையிழந்து ஒடுங்கிவிட்டது. தமிழ் இனத்தவர்க்குத் தமிழ்தான் தாய்மொழி . பிறந்த குழந்தை, தன்னைப் பெற்றவளை ' அம்மா ' என்று அழைக்கின்றது . பெற்றவளும், 'கண்ணே' என்று தன் குழந்தையை அழைக்கின்றாள். இப்படி , தாயை அழைத்தமொழி-தாயாலும் அழைக்கப்பட்ட மொழி தமிழேயாதலால், அது நம் தாய்மொழி ஆகிறது. அந்த அருமை மொழி , ஆங்கிலேயர் வேங்கடத்திற்குத் தெற்கே அரசியல் ரீதியில் ஆதிக்கம் பெறுவதற்கு முன்பேனும் உரிமையுடன் வாழ்ந்ததா என்றால்,'இல்லை' என்பதை வெட்கத்தோடும் வேதனையோடும் சொல்ல வேண்டியிருக்கிறது . பிரச்சா ரத்திற்காக அல்லாமல், ஆராய்ச்சி க்காகவேனும் தமிழ்மொழி உரிமை இழந்த வரலாற்றைச்சிறிது சுருக்கமாகக் கூறுவோம். இமயம்வரை தமிழ்! தென்குமரிதொட்டு வடஇமயம் வரை ஒரு மொழி வைத்து உலகாண்டனர் தமிழர் ."குமரியொடு வடஇமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட "சேரலாதன்" என்பது , சிலப்பதிகாரம் 'வாழ்த்துக் காதை'யின் துவக்கத்தில் உள்ள 'உரைப்பாட்டுமடை' தரும் செய்தியாகும் . மதுரைக் காண்டம் , 'காடுகாண் காதை'யிலே, |