பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி என்று கூறி, சேரன் செங்குட்டுவனை வாழ்த்துகின்றான், அந்தணனான மாடல மறையோன். சிலப்பதிகாரம் தரும் இந்தச் சான்றுகளால் , வரம்பிட்டுச் சொல்ல முடியாத ஒரு காலக்கட்டத்திலே , குமரிதொட்டு இமயம் வரை தமிழ் மொழியே வழங்கிவந்தது புலனாகின்றது . இ்து எப்படியாயினும் , குமரி தொட்டு வேங்கடம் வரை உள்ள - இன்று நாம் வாழ்கின்ற - தமிழகத்திலே கடந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலமாகத் தமிழ்மொழி ஒன்றே வழங்கி வந்தது என்பதனை மறுப்பார் இலர் . மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே தனக்கென ஒரு இலக்கணத்தைப் பெற்று , அதற்கு முன்னும் பின்னுமாக நீண்டதொரு இலக்கியப் பாரம்பரியத்தையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து வந்திருக்கின்றது தமிழ்மொழி. தன்னேரில்லாத தனி மொழியே எனறாலும், தெலுங்கு -கன்னடம் - மலையாளம்-துளு ஆகிய சேய் மொழிகளின் தாய் மொழியாக இருப்பினும், ஒரு காலக்கட்டத்திலே பிராகிருதம் - சமஸ்கிருதம் ஆகிய வட மொழிகளின் தொடர்பையும் பெற்றது நமது தாய்மொழியான தமிழ்.ஆம்;தன் உரிமையையும் தனித்தன்மையையும் இழக்காத நிலையிலே! இதனை நினைப்பூட்டவே , தமிழ்த்தாய் தன் பண்டைப் பெருமையைக் கூறுங்கால், "உயர் ஆரியத்திற்கு நிகர் என வாழ்ந்தேன்" எனப் பெருமை பேசியதாக ஆன்றவிந்தடங்கிய சான்றோரான அமரகவி பாரதியார் கூறுகின்றார் . சைவ சமயக் குரவரான திருநாவுக்கரசரும் , இறைவன் "முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் " என்று வருணித்து, தம் தாய் மொழி உயர் ஆரியத்திற்கு நிகரானது என்பதை உறுதிப்படுத்து கின்றார் . திருஞானசம்பந்தரின் அவதாரச் சிறப்பை வருணிக்கும் சேக்கிழார் பெருமான், திசையனைத்தின் பெருமைஎலாம் தென்திசையே வென்றேற மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல அசைவில்செழுந் தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல.... |