பக்கம் எண் :

4விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

          சிவம்பெருக்கும் பிள்ளையார்
             திருஅவதா ரம்செய்தார்1

   எனப் பாடுகின்றார்.புராண மதம் தலை தூக்கியதால் வைதிகம்   வாழ்வு
பெற்றிருந்த  காலத்திலும்  ஞானசம்பந்தரின்  வருகையால்  தமிழ்   தென்
திசையின்  தமிழ்  வழக்கு எண்திசையையும் வென்று முன்னேறும்   என்று
நம்பினார்  சேக்கிழார்.  ஆம்,   அவர்  அப்படி  நம்பும்      நிலையில்
தமிழரிடையே  தாய்மொழிப்  பற்று   வலுத்திருந்தது, அவர்  காலத்திலே!
மகாகவி   கம்பரும் தமிழ்மகனாக இராமனை அறிமுகப்படுத்தும்  பொழுது,

          தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு
          எல்லை தேர்ந்தான்2

   என்று  கூறுகின்றார். தென்மொழியான தமிழ், பேச்சு வழக்கில்  உள்ள
மக்கள் வாழ்க்கை மொழியாதலால் , அதனை மொழி என்னும்  பொருளில்
'சொல்' எனக் குறிப்பிடுகின்றார். வடமொழியைப்  பாரதம் முழுவதற்குமான
கலாச்சாரப்  பொது   மொழியாகக்  கருதி ,  ' வடசொல் கலை '  என்று
குறிப்பிடுகிறார் . சுருங்கச் சொன்னால் ,  வடமொழியான   சமஸ்கிருதமும்
தென் மொழியான தமிழும் ஒன்றோடொன்று சமநிலையில் உறவு கொண்டு,
ஒன்றையொன்று வளர்த்து,  இரண்டுமே வாழும் என்று நம்பினார்கள்-வாழ
வேண்டும் என்றும்  விரும்பினார்கள் . இடைக்காலத்தில்  வாழ்ந்த தமிழ்ப்
புலவர்கள்.இதற்கு மாறாக, தமிழ்மொழியை அடக்கி, அதன் மீது ஆதிக்கம்
செலுத்தும்     உயர்மொழியாக   வடமொழி   பயன்படுத்தப்   பெற்றது
பிற்காலத்தவரால்!

ஆந்திரர்-மராத்தியர் ஆதிக்கம்!

     தமிழகத்தின் மீது ஆங்கிலேயர் அரசியல் ஆதிக்கம்    பெறுவதற்கு
முன்பு  வேற்றுமொழி  இனத்தினர்  பலர்  இங்கு மாறி  மாறி  ஆதிக்கம்
பெற்றனர்.அவர்கள், பல்லவரும் ஆந்திரரும் மராத்தியரும்  மொகலாயரும்
ஆவர் . அவர்கள்   காலத்திலேதான் ,  சமஸ்கிருத   மொழிக்கும்  தமிழ்
மொழிக்கும் இருந்த உறவுநிலையில் விரும்பத்தகாத  மாறுதல் ஏற்பட்டதாக
அறிய  முடிகிறது. அவர்கள் காலத்தில்தான்  வேங்கடத்திற்குத் தெற்கேயும்
புரோகித மதம் புகுந்தது. இன்றும் தமிழ்நாட்டுப்  புரோகிதர்களி்லே  மிகப்
பெரும்பாலோர் தெலுங்கு மொழியினராக இருத்தலே  இதற்குச் சான்றாகும்.

      ஆந்திரப் பேரரசு  தமிழகத்தின் மீது ஆதிக்கம் பெற்றதால்  தமிழ்
மொழியிலும்  தமிழர்  வாழ்விலும் ஏற்பட்ட  மாறுதல்களைத்  தேசியக்கவி
பாரதியார் கூறக் கேட்போம்:


1. அப்பர் தேவாரம் - திருமறைக்காடு
2. கம்பராமாயணம், அயோ நகர்நீங்கு படலம் ...