பள்ளிக்குப் போகுமுன் பிள்ளையெலாம்-மனப்
பாடமாய் இதனைச் செய்துவிட்டால்,
பள்ளியில் நோய்கள் அணுகாது-பிள்ளை
பாதையை விட்டு விலகாது

பிள்ளைக் கலிதீர்க்க வந்ததெல்லாம்-நம்
பிள்ளைக ளாகவே வாழுதற்கு
வள்ளியப் பாஇன்று பாடிவைத்த-காந்தி
வள்ளல் கதைஒரு வாய்க்காலாம்.

கஞ்சிக்குப் போட்டிடும் உப்பினிலே-நாம்
கடலைக் கண்டு களிப்பதுபோல்,
காந்தியின் கதையைச் சிறிதாக்கி-இவர்
கவியில் அகத்தியன் ஆகிவிட்டார்!

காந்தி மகானின் கதைபாடி-அதைக்
கண்ணீர் வார்த்து வளர்த்ததற்குக்
கைமேல் பலனைக் கண்டுவிட்டேன்-அடிக்
கன்றைக் கண்ட கதலியைப்போல்.

உள்ளூர்க் காரன் வள்ளியப்பா-தன்
உள்ளம் உருகிச் சொல்லியப்பா,
வள்ளி மணாளன் அருளாலே-என்றும்
வாழிய, வாழிய புவிமேலே.

-கொத்தமங்கலம் சுப்பு