முகப்புதொடக்கம்

ii


இவற்றை இணைத்தால், 'அகராதி' என்னும் பெயர் கிட்டுகிறது. இத் தொடரே இரேவணசித்தருக்கும் பெயராக்கத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம்.

அகரமுதலி:

'அகராதி' என்பதில் 'ஆதி' வடசொல். வடசொற் கலந்த பெயரை நாம் வழங்குதல் முறையோ ? அப் பொருள்பயக்கும் தமிழ்ப்பெயர் ஆக்கலாமே என்னும் எண்ணம் தமிழறிஞரிடையே எழுவதாயிற்று. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் தாம் இயற்றி, 1906-ல் பதிப்பித்த'சேந்தன் செந்தமிழ்' என்னும் நூலில் அகரநிரலில் தரப்பட்டுள்ள பகுதியை 'அகரமுதல்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். 'அகரமுதல் னகர இறுவாய்' என எழுத்துகளை அறிமுகப்படுத்திய தொல்காப்பியரின் தொடரை எடுத்தாண்டுள்ளார் என்று கருதலாம். மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் 'அகரமுதலி'என்னும் பெயரைத் தமிழுலகில் நடையாடவிட்டார். அகரத்தை முதலாகக்கொண்டு அமைவதுதானே சொற்பொருள் உணர்த்தும் அகராதி நூல். இவர் முதற்குறளின் முதலிரு சீர்களாகிய 'அகர முதல' என்பதனை முன்னோடியாகக் கொண்டே 'அகரமுதலி' என்னும் அழகிய தமிழ்ப்பெயரை ஆக்கியுள்ளார். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிடும் இந்தத் தமிழ் - தமிழ் அகரமுதலி என்னும் சொற்பொருள் விளக்கப் பெருந்தொகுதியே இப் பெயரைப் பெறும் முதல் நூலாகும். நடைமுறை எழுத்து வடிவங்களைப் பெற்று வெளிவரும் தன்மையிலும் இது முதலாவதாகும்.

அகரமுதலி விளக்கம்:

'அகரமுதலியாவது' அகரத்தை முதலாகக்கொண்டு நெடுங்கணக்கு முறையில் அமையும் சொற்பொருள் விளக்க நூல் என்பதனைத் தெளிவுறத் தெரிவிக்கும். 'அகராதி' என்னும் பெயருக்கும் பொருள் இதுவே*. வரலாற்று முறையில் 'அகரமுதலி' என்னும் பெயர் இருபதாம் நூற்றாண்டில் பிறந்ததொரு புதுப்பெயர் ; புத்தாக்கப்பெயர்; அகராதி என்பதற்கு ஏற்புடைய மாற்றுப்பெயர்; தமிழ்ப்பெயர்.

மவுனகுரு:

அகரமுதலி, கற்பார்க்குத் துணைநின்று உரிய பொருள் தெரிந்துகொள்ள வழிவகுத்து உதவுகிறது.ஆதலால், கல்வி கற்பிக்கும் ஆசானின் நிலையில் உள்ளது அகராதி என்னலாம். ஆசான் ஒருவரை அடுத்துக் கல்விப்பயன் பெறுவதுபோல அகராதியின் துணையால் அறிவுவிளக்கம் பெறலாம். ஓர் ஆசிரியர் உரிய பொருள்களையும் கருத்து நுட்பங்களையும் எடுத்துரைத்து, மாணவரின் ஐயம் அகற்றி, அரும்பொருளை அவர் அறியச் செய்திடுவார். அகராதியும் தன்னைப் பயன் படுத்துவாருக்கு அத்தகு நற்பயனை அளிக்கவல்லது. இதுபற்றியே அகராதியை 'மவுனகுரு' , 'மவுனாச்சாரி', 'மவுனவாசான்' என அறிஞர் போற்றுவாராயினர். சதுரகராதியைப் போற்றிப் புகழும் ஒருவர்,

"ஓர்மொழியும் ஓதாது உரைசெய் துணர்த்துவதால்
கூர்மவுனாச் சாரியெனக் கொள் "

என்றும்,

"பேசா துணர்த்திப் பிரித்துரைப்ப தால்மவுன
வாசான் நமக்கென்றும் ஆம் "

என்றும் உரைப்பது ஈண்டுச் சிந்தித்தற்குரியது. இதனால் அகராதிகளின் பெருஞ்சிறப்பும் பயன்பாடும் தெள்ளென விளக்கமாகும்.



* அகராதி என்பதற்கு விளக்கம் மானிப்பாய் அகராதியில்தான் முதன்முதல் தரப்படுகிறது.

அகராதி - அகரமுத லெழுத்துக்களாற் றொடங்குஞ் சொற்கோவை(மானிப்பாய் அகராதி). இந்த விளக்கமே கா. இராமசாமி நாயுடுவின் பேரகராதி, பி.இராமநாதனின் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெயரகராதி முதலியவற்றிலும் காணப்படுகிறது.