முகவுரை
(தொகுப்பாசிரியர்)

அகரவரிசை:

அகரவரிசை தொல்காப்பியர் நாளிலேயே தொடக்கமாயிற்று. "எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப" என்று எழுத்துகளைத் தொகைசுட்டி முதற்கண் அவர் அறிவிக்கின்றார்; பின்னர், சொற்களின் புணர்ச்சி கூறத்தொடங்குமிடத்து மொழிமுதல் எழுத்து மொழியிறுதி எழுத்துகளை வரையறுத்துக் காட்டியுள்ளார். மொழிமரபில் விளக்கிய மெய்ம்மயக்க மரபுகளை நினைவுகூர வைக்கும் வகையில் உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல் என உயிரீற்றுச் சொற்கள், புள்ளியீற்றுச் சொற்களுடன் பிற சொற்கள் புணரும் முறைமை காட்டும் பகுதிகளுக்குப் பெயரிட்டுள்ளார். இவ்விரு இயல்களிலும் அவ்வச் சொற்களின் ஈறுகளை அகரவரிசை முறையில் அமைத்துச் சொற்புணர்ச்சி இலக்கணம் உரைக்கின்றார்.

திருக்குறளும் அகரமுதல் னகர இறுவாய் அமைப்புமுறையை நினைவூட்டும் வகையில் காட்சிதருகிறது. "அகர முதல எழுத்தெல்லாம்" என்று தொடங்கிய வள்ளுவப் பெருந்தகை "கூடி முயங்கப் பெறின்" (1330) என னகர ஈற்றுச் சொல்லால் நூலைத் தலைக்கட்டுகிறார்.

திருநாவுக்கரசர் அருளிய சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை (தேவா. 5. பதி.211) அகரவரிசை முறையில் அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.

அகராதி நிகண்டு:

தமிழ் நெடுங்கணக்கு எழுத்துமுறையை வேறு சிலரும் சுட்டியபோதிலும், 'அகராதி' என இன்று வழங்கும் பொருளில் நூலாக்கம் செய்தவர் சிதம்பரம் இரேவணசித்தரேயாவார். இவரை இரேவணாத்திரியர் என்றும் குறிப்பது உண்டு. இவர் கி.பி. 1594-ல் தாம் இயற்றிய நிகண்டிற்கு 'அகராதி நிகண்டு' எனப் பெயர் சூட்டினார். பெயருக்கு ஏற்பச் சொற்கள் அகரவரிசையில் அமைய நூற்பாக்களை முறைப்படுத்தியுள்ளார். எனவே, இவருடைய நிகண்டு நூலினை 'அகராதி சூத்திரம்' என்றும் குறிப்பிடுவது உண்டு.

அகரவரிசை அமைந்த வகை:

இன்று நாம் கருதுவதுபோலச் சொற்களின் அகரவரிசை முறை - அதாவது சொல்லின் இரண்டாம் மூன்றாம் முதலிய எழுத்துகளையும் நோக்கி அமைக்கும் முறை - அந் நாளில் இல்லை. அகரமுதலிய எழுத்துவருக்கச் சொற்கள் அவ்வப் பகுதியில் இடம்பெறுதல் காணலாம். இதனினும் சற்று வளர்ச்சிபெற்ற அகரநிரல்முறை, அகராதி மோனைக் ககராதி யெதுகை, பல்பொருட் சூடாமணி, பொதிகை நிகண்டு ஆகியவற்றில் காணப்படுகின்றன.

அகராதிப் பெயர்;

செய்யுள் வடிவிலேயே வழங்கிவந்த நிகண்டுநூற் பொருள்களை உரைநடையில் அகரநிரலில் அமைத்துத்தர முற்பட்ட முதல்வர் வீரமாமுனிவர் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற பெஸ்கி பாதிரியாரேயாவார். சொற்பொருள் உணர்த்தும் நூலுக்கு ' அகராதி' என்னும் பெயரை வழங்கியவரும் இவரே. கி.பி. 1732-ல் பெஸ்கி பாதிரியார் தாம் தொகுத்து அமைத்த நூலுக்குச் 'சதுரகராதி' என்னும் பெயரினைச் சூட்டினார். அதுமுதலாகச் சொற்களுக்கு உரைவழி விளக்கம் தரும் நூல்கள் எல்லாம் ' அகராதி' என்னும் பெயரினைப் பெறுவதாயின.

வள்ளுவர் வழங்கிய வான்மறையின் முதற்குறட்பா,

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு".

என்பது. இதன் முதலடியில், ' அகரம் ' - ' ஆதி' என்னும் இருசொற்களும் இடம்பெறுகின்றன.