முகப்பு | தொடக்கம் |
iv |
' நிகண்டு ' என்னும் வடசொல்லுக்குத் ' தொகுதி ' என்பது பொருள் . தெய்வப்பெயர் , மக்கட்பெயர் முதலியவாகத் தொகுத்து விளக்கம் தருவது என்பதாம் . சூடாமணி நிகண்டு கற்றாரிடையே மிகுதியும் போற்றப் பெற்றமையால் ஏனைய உரிச்சொற் பனுவல்களையும் ' நிகண்டு ' எனச் சுட்டும் வழக்கம் மிகுதியாயிற்று . நிகண்டுகளின் உள்ளுறை: நிகண்டுகள் , ஒரு பொருளுக்கு உரிய பல பெயர்களையும் தெய்வப்பெயர் , மக்கட்பெயர் , விலங்குப்பெயர் முதலியனவாக வகுத்தும் தொகுத்தும் தருகின்றன . இவற்றோடு ஒரு சொல்லுக்குரிய பல பொருள்களையும் விளக்கும் பகுதி ஒன்றும் காணப்பெறும் . இதுவே அகராதிநிலையில் பயன்பாடுள்ள பகுதி . இதனால் சூடாமணி நிகண்டில் ஒருசொற் பல்பொருள் உரைக்கும் பதினொன்றாம் தொகுதியைப் 'பதினொராம் நிகண்டு ' எனத்தனியாகவும் அச்சிட்டுப் போற்றுவாராயினர் . அகராதிமுறை வழக்கிற்கு வந்தபோது இத்தொகுதிச் சொற்களை அகராதியாக மாற்றி அமைத்துச் ' சொற்பொருள் விளக்கம் ' என்னும் ஒரு நூலை 1850-ல் அண்ணாசாமிப்பிள்ளை என்பார் வெளியிட்டார் . பல்வகை நிகண்டுகள்: இருசுடர் , முக்குணம் என்றாற்போல் வரும் தொகைப்பெயர் விளக்கமாயும் நிகண்டுகளில் ஒரு பகுதி அமைகின்றது . ஆகவே , நிகண்டுகளில் ஒருபொருட் பல்பெயர் , ஒருசொற்பல்பொருள் , தொகைப்பெயர் என்னும் மூன்று பெரும் பாகுபாடுகளைக் காணலாகும் .மேலே சுட்டிய மூவகைப் பொருள்களையுங்கொண்ட நூல்களும் அவற்றுள் ஒவ்வொரு பகுதியை மட்டும் எடுத்து விளக்கும் நூல்களும் காலப்போக்கில் பலவாக வந்துள்ளன . மூவகையான சொற்கோவைகளையும் கொண்ட நிகண்டுகள் திவாகரம், பிங்கலம், உரிச்சொல் நிகண்டு, கயாதரம், பாரதி தீபம், ஆசிரிய நிகண்டு, கைலாச நிகண்டு, பல்பொருட் சூடாமணி, தமிழ் உரிச்சொற் பனுவல் முதலியனவாம் . ஒருபொருட் பல்பெயர்களை மட்டும் தனியாக எடுத்துக்காட்டும் நிகண்டு நாமதீப நிகண்டு மட்டுமே . ஒருசொற் பல்பொருள் விளக்கமாக அமைந்த தனி நிகண்டுகள் அகராதி நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, நாநார்த்த தீபிகை என்பனவாம் . தொகைப்பெயர் விளக்கமாகத் தனிப்பட அமைந்த நிகண்டுநூல் பொருட்டொகை நிகண்டு ஒன்றுமே . இவ்வாறாக உரிச்சொற் பனுவல்கள் திவாகரம் முதற்கொண்டு 1984-ல் கவிராசபண்டித இராமசுப்பிரமணிய நாவலரின் தமிழ் உரிச்சொற் பனுவல்வரை 25 நூல்களுக்கு மேற்பட உள்ளன . இலக்கண நூல்கள் பல பல்வேறு காலத்தில் தோன்றியதுபோல உரிச்சொற் பனுவல்களும் பலவாக ஆக்கப்பெற்று வந்துள்ளன என்பது தெரியவரும் . இதனால் சொற் பொருள் காணும் முறைமையான வளர்ச்சியையும் நிகண்டுநூல்கள் சுட்டிக்காட்டி நிற்கின்றன . நிகண்டுகளில் அமைந்த பாவகை: நூற்பா, வெண்பா, ஆசிரியவிருத்தம், பிறவகை விருத்தம், கட்டளைக்கலித்துறைப் பாக்களிலும் நிகண்டுகள் ஆக்கப்பட்டிருக்கின்றன . ஆயினும் , நூற்பாவினால் அமைந்த நிகண்டுகளே மிகுதியாகக் காணப்படுகின்றன . திவாகரம் , பிங்கலம் , அகராதி நிகண்டு , பல்பொருட் சூடாமணி , பொதிகை நிகண்டின் இரண்டாம் பகுதி , கைலாச நிகண்டு , பொருட்டொகை நிகண்டு , தமிழ் உரிச்சொற் பனுவல் என்னும் எட்டு நூல்கள் நூற்பாவினால் அமைந்துள்ளன . வெண்பாவினால் ஆன நிகண்டுகள் உரிச்சொல் நிகண்டும் நாமதீப நிகண்டும் . கட்டளைக்கலித்துறைப்பாவினால் இயன்றவை கயாதரம் , பாரதி தீபம் , நவமணிக் காரிகை நிகண்டு என்னும் மூன்றுமாம் . அசிரியவிருத்தம் முதலிய விருத்தப் பாக்களினால் அமைக்கப்பெற்ற நிகண்டுகள் நூற்பாவினாலான நிகண்டுகளின் தொகை அளவை எட்டுகின்றன . நிகண்டு சூடாமணி , வேதகிரியார் சூடாமணி , ஆசிரிய நிகண்டு , பொதிகை நிகண்டின் முதற் பகுதி , அரும்பொருள் விளக்க நிகண்டு , சிந்தாமணி நிகண்டு , |