1.கிளவியாக்கம்

[எழுத்துக்கள் பொருள்தரும் முறையில் சொற்களாகும் வகை உணர்த்துவது.]

திணை

உயர் திணையும் அஃறிணையும்

1உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை யென்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே.

நிறுத்த முறையானே1 சொல்லுணர்த்திய எடுத்துக் கொண்டார்; அதனால் இவ்வதிகாரம், சொல்லதிகாரமென்னும் பெயர்த்தாயிற்று.

சொல்லாவது எழுத்தோடு ஒருபுடையான் ஒற்றுமை யுடைத்தாய்ப் பொருள் குறித்து வருவது. உரையாசிரியரும் எழுத்தாதல் தன்மையோடு புணர்ந்து என்பார் 'எழுத்தொடு புணர்ந்து என்றாகலின், ஒருபுடையொற்றுமையே கூறினார். தன்மையொடு புணர்ந்து என்னாக்கால். ஒரெழுத் தொருமொழிக்கு எழுத்தொடு புணர்தல் இன்மையின் சொல்லாதல் எய்தா தென்க. பொருள் குறித்து வாராமையின் அசைநிலை சொல்லாகா எனின், 'ஆவயின் ஆறும் முன்னிலை யசைச்சொல்' (சொல்-274) என்றும், 'வியங்கோ ளசைச்சொல்'(சொல்-273) என்றும் ஓதுதலான், அவையும் இடமுதலாகிய பொருள்குறித்து வந்தன என்க. 'யா கா பிற பிறக்கு' (சொல்-279) என்னுந் தொடக்கத்தனவோ எனின், அவையும் மூன்றிடத்திற்கும் உரியவாய்க் கட்டுரைச் சுவைபட வருதலின் பொருள் குறித்தனவேயாம். இக்கருத்தே பற்றியன்றே ஆசிரியர் 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' (சொல்-155) என்றோதுவாராயிற் றென்க.

சொற்றான் இரண்டு வகைப்படும். தனி மொழியும், தொடர்மொழியும் என. அவற்றுள் தனிமொழியாவது, சமய ஆற்றலால்2 பொருள் விளக்குவது. தொடர்மொழியாவது, அவாய் நிலை3 யானும் தகுதி4 யானும் அன்மை நிலை 5 யானும் இயைந்து பொருள் விளக்குந் தனிமொழி ஈட்டம்.

பெயர்ச்சொல்லும், வினைச்சொல்லும், இடைச்சொல்லும், உரிச்சொல்லு மெனத் தனிமொழி நான்குவகைப்படும். 'மரம்' என்பது பெயர்ச்சொல். 'உண்டான்' என்பது வினைச்சொல். 'மற்று' என்பது இடைச்சொல். 'நனி' என்பது உரிச்சொல்.

இருமொழித் தொடரும் பன்மொழித் தொடரும் எனத் தொடர்மொழி இரண்டு வகைப்படும். ' சாத்தான் வந்தான்' என்பது இருமொழித் தொடர். 'அறம் வேண்டி அரசன் உலகம் புரத்தான்' என்பது பன்மொழித் தொடர்.

அதிகாரம் என்னும் சொற்குப் பொருள் பல உளவேனும், ஈண்டு அதிகாரம் என்றது ஒரு பொருள் நுதலி வரும் பல ஒத்தினது தொகுதியை என்க. வடநூலாரும் ஓரிடத்து நின்ற சொல் பல சூத்திரங்களோடு சென்றியைதலையும், ஒன்றன திலக்கணம் பற்றி வரும் பல சூத்திரத் தொகுதியையும் 'அதிகாரம்' என்ப6 சொல்லதிகாரம், சொல்லையுணர்த்திய அதிகாரம் என விரியும் அச் சொல்லையாங்ஙனம் உணர்த்தினானோ எனின், தன்மையே எடுத்தோதியும், இலக்கணங்கூறியும் உணர்த்தினான் என்பது.

வழுக் களைந்து சொற்களை ஆக்கிக்கொண்டமையான். இவ்வோத்துக் 'கிளவியாக்க' மாயிற்று. ஆக்கம்-அமைத்துக்கோடல்; நொய்யும் நுறுங்கும் களைந்துஅரிசி அமைத்தாரை அரிசியாக்கினார் என்ப வாகலின். சொற்கள் பொருள்கள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்க மாயிற்று எனினும் அமையும். பொதுவகையாற் 'கிளவி' என்றமையால் தனிமொழியுந் தொடர் மொழியுங் கொள்ளப்படும். கிளவி, சொல், மொழிஎன்னுந் தொடக்கத்தனவெல்லாம் ஒருபொருட் கிளவி.

இதன் பொருள்: மக்களென்று கருதப்படும் பொருளை ஆசிரியர் உயர்திணையென்று சொல்லுவர். மக்களென்று கருதப்படாத பிறபொருளை அஃறிணையென்று சொல்லுவார். அவ்விரு திணைமேலும் சொற்கள் நிகழும் என்றவாறு.

எனவே உயர்திணைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் எனச்சொல் இரண்டு என்றவாறாம். மக்கட்சாதி சிறந்தமையான். 'உயர்திணை' என்றார்.

என்மனார் என்பது செய்யுள் முடிபெய்தி நின்றதோர் ஆர் ஈற்று எதிர்கால முற்றுச்சொல், என்றிசினோர், கண்டிசினோர் என்பன முதலாயின அவ்வாறு வந்த இறந்தகால முற்றுச்சொல். என்ப என்னும் முற்றுச்சொல்லினது பகரும் குறைத்து மன்னும் ஆரும் என இரண்டு இடைச்சொல் பெய்துவிரித்தார் என்று உரையாசிரியர் கூறினாரால் எனின் 'என்மனார்' என்பது இடர்ப்பட்டுழிச் சிறுபான்மை வராது, நூலுள்ளுஞ் சான்றோர் செய்யுளுள்ளும் பயின்று வருதலாலும்7, இசைநிறை என்பது மறுத்துப் பொருள் கூறுகின்றார் பின்னும் இசைநிறை என்றல் மேற்கோள் மலைவாதலானும் அவர்க்கது கருத்தன்றென்க. மாணாக்கர்க்கு உணர்வு பெருகல் வேண்டி வெளிப்படக் கூறாது உய்த்துணர வைத்தல் அவர்க்கு இயல்பாகலான் செய்யுள் முடிபென்பது கூறாராயினார்.8

என்மனார் ஆசிரியர் எனவே, உயர்திணை, அஃறிணை என்பன தொல்லாசிரியர் குறியாம். ஆசிரியர் என்னும் பெயர் வெளிப்படாது நின்றது.

மக்களாகிய சுட்டு யாதன்கண் நிகழும், அது மக்கட்சுட்டு எனப் பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை9. ஈண்டு மக்கள் என்றது மக்கள் என்னும் உணர்வை. எனவே, மக்களேயாயினும் மக்களென்று சுட்டாது பொருளென்று சுட்டியவழி உயர்திணை எனப்படாது என்பதாம்.

இனி அவரல என்னாது பிற என்றே விடின், யாதல்லாத பிற என்று அவாய் நிற்குமாதலின் அவரல என்றார். மக்கட் சுட்டே என்று மேல் நின்றமையின் மக்களல்லாத பிற என்று உணரலாம் எனின். ஆற்றல் முதலாயினவற்றாற் கொள்வது சொல் இல்வழி என மறுக்க. இனி அவரல என்றே ஒழியின் அவற்றது பகுதி10யெல்லாம் எஞ்சாமல் தழுவாமையின் எஞ்சாமல் தழுவுதற்கு அவரல பிற என்றார்.

செய்யுளாகலான் ஆயிருதிணை எனச் சுட்டு நீண்டது. வரையறையின்மையின் 11ஈண்டு யகர உடம்படுமெய் ஆயிற்று.

சொல் நிகழ்ச்சிக்குப் பொருள் இடமாகலின், ஆயிருதிணையின்கண் என ஏழாவது விரிக்க. இன்சாரியை வேற்றுமையுருபு பற்றியும் பற்றாதும் நிற்கும் என்று உரையாசிரியர் இரண்டாவது விரித்தாராலெனின்; -'சாரியை உள்வழிச் சாரியை கெடுதலும்-சாரியை உள்வழித் தன் உருபு நிலையலும்' (எழு-157) என்று இரண்டாவதற்குத் திரிபு ஓதினமையானும், 'செலவினும் வரவினும் தரவினுங் கொடையினும்' (சொல்-28) என்புழியும் பிறாண்டுமெல்லாம் ஏழாவது விரித்தற்கேற்பப் பொருளுரைத்தமையானும், அவ்வுரை போலியுரை யென்க. ஆயிருதிணையினும் என்னும் உம்மை விவகாரவகையால் தொக்கு நின்றது.

இசைக்கும் என்பது செய்யும் என்னும் முற்றுச்சொல். மன் என்னும் இடைச்சொல் மன என ஈறு திரிந்து நின்றது. மன் என்று பாடம் ஓதுவாரு முளர். ஏகாரம்; ஈற்றுசை.

சொல் வரையறுத்தலே இச் சூத்திரத்திற்குக் கருத்தாயின் ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல் என்றாற்போல உயர்திணைச்சொல் அஃறிணைச்சொல் என அமையும்.உயர்திணை மக்கள் அஃறிணை பிற எனல் வேண்டா எனில்: உயர்திணை அஃறிணை என்பன தொல்லாசிரியர் குறியாகலான், ஆடூஉ மகடூஉப்போல வழக்கொடு படுத்தப் பொருள் உணரலாகாமையியின், உயர்திணை மக்கள் அஃறிணை பிற எனல் வேண்டும் என்பது. இவ்வாறு பொருள் நுதலிற்றாக உரையாக்கால், சூத்திரம் ஒன்றாமாறில்லை என்க.

(1)

1. நிறுத்த முறையாலது; முந்துநூலுள் நிறுத்த முறை.

2. சமய ஆற்றலாவது: இச் சொல்லால் இப் பொருளை உணர வேண்டுமென்ற இறைவனின் விருப்பம். இதனை வடநூலார் 'சங்கேத ரூபா சக்தி' என்பர்.

3. அவாய் நிலை: ஒரு சொல் தன் பொருளை விளக்குவதான மற்றொரு சொல்லை அவாவி நிற்றல். எ-டு: ஆ கிடந்தது: ஆ என்ன செய்தது என அவா நிகழ்ந்த வழி ஆ எனவும் ஒன்றையொன்று அவாவி நின்று பொருள்விளக்குதல் காண்க.

4. தகுதி: ஒரு சொல் மற்றொரு சொல்லோடு தழுவத் தகுதியுடைத்தாதல், எ-டு: நீரால் நனை-நனைத்தற்கு நீர் தகுதியுடைத்தாதல் காண்க. தீயால் நனை-என்ற பொழுது நனைத்தற்குத் தீ தகுதியுடைத்தன்றாதல் காண்க.

5. அண்மை: சொற்களை இடையீடின்றிக் கூறுதல். எ-டு: ஆவைக்கொணொ என இடையீடின்றிக் கூறிக் காண்க. அங்கனமின்றி ஆவை எனக் கூறியபின் ஒரு நாழிகை சென்று கொணாஎனக் கூறினும் ஆவை கூறியபின் 'ஆட்டைக் கண்டேன் நீ செல்' என்பன போன்ற பல தொடர்களையோ அன்றிப் பல சொற்களையோ கூறிப்பின் கொணா எனக் கூறினும் அண்மையின்மையால் பொருள்படாமை காண்க. இது பற்றியே இலக்கண விளக்க ஆசிரியர்,
"தனிமொழி சமய வாற்றலாற் றனித்துந்
தொடர்மொழி யவாய் நிலை தகுதி யன்மையிற்,
றொகைநிலை தொகாநிலை யாயிரு வகையிற்,
றொடர்ந்தும் பொருளைத் தோற்றுதலியல்பே"
எனக் கூறினமையுங் காண்க.

இவற்றை வடநூலார் முறையே ஆகாங்ஷா, யோக்யதா, சந்நிதி என்பார்.

6. இதனைச் சிவஞான முனிவர் விரித்துணர்த்தினர். தொல்காப்பியச் சூத்திர விருத்தியுட் காண்க.

7. இப்பகுதி பற்றிய கருத்து, அச்சிட்ட இளம்பூரண உரையுட் காணப்படவில்லை இங்ஙனமே உரையாசிரியர் கருத்தெனக் கொண்டு சேனாவரையர் மறுத்து இடங்கள் பல அச்சிட்ட இளம்பூரண உரையுள் காணப்படவில்லை. இதனால், உரையாசிரியர் இளம்பூரணரல்லாத வேறொருவரோ எனச் சில அறிஞர் ஐயுறுகின்றனர். இஃது ஆராயத்தக்கது.

8. ஈண்டுக் கூறியவாற்றால் மன் இசின் இரண்டும் முறையே எதிர்கால இடைநிலையும் இறந்தகால இடைநிலையுமாம் என்பது பெறப்பட்டது . சிவஞான முனிவர் சிவஞான பாடியத்துள் என்மனாரென்பது செய்யுண் முடிபாயதோர் ஆரீற்று முற்றுச் சொல். மன் எதிர்கால இடைநிலை. அது உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே என்னுஞ் சூத்திரத்துச் சேனாவரையாருரையானும் அறிக என்றார் . இங்ஙனமாகவும் மன் இறந்தகால இடைநிலையென்பர் சிலர்.

9. மக்கட் சுட்டென்பது அன்மொழித் தொகை யன்றெனவும் இரு பெயரொட்டாகு பெயரெனவுஞ் சிவஞான முனிவர் கூறினர். தொல்காப்பியச் சூத்திர விருத்தியுட் காண்க :

10. பகுதி - உயிருள்ளவும் உயிரில்லவும் காட்சிப்பொருளும் கருத்துப் பொருளுமாகிய பலவகை.

11. வரையறையின்மையின் - புணரியலில் இன்னவுயிருக்குப் பின் இன்ன உடம்படு மெய்யென வரையறுக்கப்படாமையின்.