ஆராய்ச்சி முன்னுரை9

9

ஆராய்ச்சி முன்னுரை

பண்டித வித்துவான், சைவப்புலவர், சித்தாந்த நன்மணி

கு. சுந்தரமூர்த்தி

தமிழ்ப்பேராசிரியர், செந்தமிழ்க் கல்லூரி, திருப்பனந்தாள்

“அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு

தார்ந்துன் னருட்கடலிற்

குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ

லோவுளங் கொண்டுதெள்ளித்

தெளிக்கும் பனுவற் புலவோர்

கவிமழை சிந்தக்கண்டு

களிக்குங் கலாப மயிலே

சகல கலாவல்லியே.”

1. முன்னுரை :

ஒரு நாட்டின் பண்பாடு, மொழி வளம், சமுதாயவளர்ச்சி இவற்றைக் காண அவ்வந்நாட்டில் எழுந்த நூல்களே போதிய கருவியாகின்றன. இந்நிலையில் நம்நாடு அம் மூவகை வளனும் தழைத்துச் செழித்து வளர்ந்திருந்தது என்பதை, நமக்கெல்லாம் பண்டும் இன்றும் என்றும் விளக்கிக் காட்டும் நூல்கள் பலவாம். அந்நூல்களுள் தொன்மை வாய்ந்ததாய் விளங்குவது நமது தொல்காப்பியமேயாகும். இதுவே பின் எழுந்த இலக்கண நூல்களுக்கெல்லாம் முன்னோடியாய் நிற்பதாகும். இதனை யருளிய தொல்காப்பியர் என்பவர் துறை போகிய கல்வியறிவும், மனநலமும், தெய்வ சிந்தனையும் உடையவராவர். தொல்காப்பியர் என்னும் பெயர் இயற்பெயரோ அன்றிக் காரணப்பெயரோ அறியோம். எங்ஙனமாயினும் தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர் என்று கூறுதலே தொன்றுதொட் டெழுந்த வழக்காக இருக்கின்றது. இவரது காலம் கி. மு. 1200 க்கு முற்பட்டது என்பர்.

இத்துணைத் தொன்மை வாய்ந்த நூலுக்கு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகிய அறுவர் உரையெழுதி யுள்ளனர். இவர்களேயன்றி வேறு பிறரும் உரை எழுதியிருக்கலாம் என இவ்வுரைகளிலிருந்து தெரியினும், இற்றைக்குக் காணும் பேற்றிற்கு ஆளாகியிருப்பது இவ்வறுவர் உரைகளேயாகும். இவ்வறுவரில் பேராசிரியர் நீங்கலாக மற்ற ஐவரும் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதியுள்ளனர். அவரும் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதி