Primary tabs
6
வியப்பாகும். தமிழர் செய்த தவப்பயனெனச் சாற்றவும் தகும் நடு நின்றவர் நற்பயன் பெறுவர் என்பதுபோல நடுநின்ற சொல்லிலக்கணம் சிறப்பெய்தித் திகழ்கின்றது, ஐவருரையாலும். ஐவருரையையும் தனித்தனி அச்சியற்றி வெளிப்படுத்தி நாட்டுக்கு நலம் விளைக்கக் கருதிற்று நம் கழகம். கழக வாயிலாக ஒவ்வொன்றும் வெளிவந்துள்ளன, வருகின்றன, வரும்.
சொல்லதிகாரம் இளம்பூரணம், பண்டித வித்துவான் சைவப் புலவர் சித்தாந்த நன்மணி, கு. சுந்தரமூர்த்தியவர்கள் ஆராய்ச்சி முன்னுரை விளக்கவுரையுடன் முன்னர் வெளிவந்தது. நச்சினார்க்கினியமும் அவ்வாறே அன்னார் ஆராய்ச்சி முன்னுரை விளக்கவுரையுடன் வெளிவந்துலவுகின்றது. சேனாவரையம் முன்னரே பேராசிரியர் கந்தசாமியாரவர்கள், ஞா. தேவநேயப்பாவாணர் அவர்கள் வரைந்த ஆராய்ச்சி அடிக்குறிப்புடன் வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளையவர்கள் வரைந்த விளக்கவுரையும் அமைத்து வெளியிட்டனம். இற்றைநாள் தெய்வச்சிலையார் உரை கழக வாயிலாக வெளியேறுகின்றது. கல்லாடர் வரைந்த வுரையும் கடுக வெளிவரும்.
தெய்வச்சிலையார் உரை 1929 இல் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பதிப்பாக வெளிவந்துள்ளமை புலவர் யாவரும் அறிவர், பின்னர் அதனை நன்முறையிற் புதுக்கி எவரும் அச்சிற் பதித்ததாக அறிந்திலம். அப் புத்தகமும் காண்பதரிதாய்ச் சிலர் கையில் மட்டும் இருந்தது. ஆதலின் அவ்வுரைப் பதிப்பு வெளிவரின் புலவருலகம் மகிழும் என்பது ஒருதலையென எண்ணினம். அவ்வுரைப் புத்தகத்தை யாய்ந்து திருத்த வேண்டுவன திருத்தி, நூற்பாக்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய தலைப்பு வரைந்து, சீர்பிரித்து, விளங்காத புணர்ச்சிச் சொற்றொடரையும் பிரித்துப் பெரிய எழுத்திற் பதித்து, உரை, எடுத்துக்காட்டு, விளக்கம் இவற்றைப் பகுதி பகுதியாகப் பிரித்துச் சிறிய எழுத்திற் பதித்து முறையே நிறுத்தி அமைத்தனம். பண்டித வித்துவான், சைவப்புலவர், சித்தாந்த நன்மணி, கு. சுந்தர மூர்த்தியவர்கள் ஆராய்ச்சி முன்னுரையும் விளக்கவுரையும் முடியினும் அடியினும் அமைக்கப்பட்டுள்ளன. கண்கவரும் வனப்புடைய கட்டுடன் விளக்கமாகப் பதிக்கப்பட்டுள்ளது. எம் வேண்டுகோட்கிணங்கி முன்னுரை விளக்கவுரை வரைந்துதவிய பேராசிரியர் சுந்தரமூர்த்தியவர்கட்குக் கழகம் என்றும் நன்றி பாராட்டுங் கடமையுடையது.
தமிழன்பர் பலரும் பேராசிரியரும் ஆராய்ச்சியாளரும் மாணவர்களும் வாங்கிக்கற்று நற்பயன் எய்துமாறு வேண்டுகின்றோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.