பக்கம் எண் :
 
11

(இ - ள்.) மூன்றொடு நான்கு ஒன்பது ஆம் உயிர்பின் உயிர் முந்தின் நடு ஆன்ற யகாரம் வந்து ஆகமமாகும் -1 இகர ஈகார ஐகார உயிரீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர், வருமொழி உயிர்முதலாகிய மொழி வந்து புணர்ந்தால், இடையே யகாரவொற்று வந்து ஆகமமாம்; அல்லா உயிருக்கு ஏன்ற வகாரம் - 2இவையல்லாத மற்ற உயிரீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி உயிர் முதலாகிய மொழி வந்து புணர்ந்தால் இடையே வகரவொற்று வந்து ஆகமமாம்; எட்டு ஏற்கும் இரண்டும் - 3ஏகாரவீற்று நிலை மொழிப் பதத்தின் பின்னர் வருமொழி உயிர் முதலாகிய மொழி வந்து புணர்ந்தால் யகார வகாரவொற்றுக்கள் இரண்டும் வந்து ஆகமமாம்; இறுதி கெட்டு தோன்றும் நிலையும் ஒரோவிடத்து ஆம் என்பர் -4ஒரோவிடத்து நிலைமொழியினது ஈற்றின் நின்ற பதமாதல்,


1. மணி + அழகிது = மணியழகிது.
நீ + அறி = நீயறி.
பனை + ஓலை = பனையோலை

2. பல + அணி = பலவணி
பலா + அது = பலாவது.
கொடு + என்றான் = கொடுவென்றான்.
பூ + அழகிது = பூவழகிது.
நொ + அது = நொவ்வது.
கோ + அழகு = கோவழகு.

3. ஏ + எறிந்தான் = ஏவெறிந்தான்.
அவனே + அறிந்தான் = அவனேயறிந்தான்.
சே + அடி = சேயடி, சேவடி

4. ஒருபது + ஆன் + ஒன்று = ஒருபானொன்று - இதில் நிலைமொழி ஈற்றுப் பதங் கெட்டது.
வாழிய + சாத்தா = வாழி சாத்தா - இதில் நிலைமொழி ஈற்றுயிர் மெய் கெட்டது.
பனை + காய் = பனங்காய் - நிலைமொழி ஈற்றுயிர் கெட்டது.
மரம் + அடி = மரவடி - நிலைமொழி ஈற்று ஒற்றுக் கெட்டது.

இவற்றுக்குச் செய்யுள் விகாரங்களை உதாரணமாகக் காட்டுதல் ஆகாது; அவை செய்யுள் நோக்கி வருதலாலும், சந்தி காரியம் பண்ணப்படுவன அல்லவாதலாலும் என்க.

மரூஉ மொழிகளை உதாரணமாகக் காட்டுதலுமாகாது; அவை சந்தி காரியம் பண்ணப்படுவன அல்லவாகலின் என்க.