பக்கம் எண் :
 
22

ஞ ந ம வக்கள் வந்து புணர்ந்தால், இடையே அவ்வவ்வந்த ஒற்று மிக்கு முடியும்; மேவிய பன் னொன்று தோன்றில் வ ஆம் - 1பின்னும் அவ்வுயிர்க்குற்றெழுத்தின் பின்னர் வருமொழி முதல் யகாரம் வந்து புணர்ந்தால், இடையே வகரவொற்று வந்து ஆகமமாம். மெய்யில் ஐந்து இரு மூன்று ஆவதும் உண்டு - 2 ஒரோவிடத்து மெய்களுக்குள் டகாரமானது ணகாரமாதலுமாம்; ஒற்று ஒரோவழி தோன்றிடும் - 3 ஒரோவிடத்து ஒற்று வந்து தோன்றுதலுமுண்டு; ஆவும் அ ஆய்த் தாவிய ஐந்தாம் உயிர் பின் பெறுவனதாமுமுண்டே - 4 ஒரோவிடத்து நிலைமொழியினது ஈற்றில் நின்ற ஆகாரமானது அகரமாகக் குறுகி அக்குறுகலுடனே ஐந்தாம் உயிர் பெறுதலும் உண்டு (எ-று.)

(24)


அ + வளை = அவ்வளை
இ + ஞாலம் = இஞ்ஞாலம்
இ + நூல் = இந்நூல்
இ + மணி = இம்மணி
இ + வளை = இவ்வளை
உ + ஞாலம் = உஞ்ஞாலம்
உ + நூல் = உந்நூல்
உ + மணி = உம்மணி
உ + வளை = உவ்வளை
எ + ஞாலம் = எஞ்ஞாலம்?
எ + நூல் = எந்நூல் ?
எ + மணி = எம்மணி ?
எ + வளை = எவ்வளை ?

(இவை வேறு பிரதியில் உள்ள உதாரணங்கள்.)

1. அ + யானை = அவ்யானை
இ + யானை = இவ்யானை
உ + யானை = உவ்யானை
எ + யானை = எவ்யானை ?

2. வேட்கை + அவா = வேணவா
இதில் ஈற்றுயிர்மெய் கெட்டு இடையிலுள்ள டகரம் ணகரமாயிற்று.

(இதுவும் வேறு பிரதியில் உள்ள உதாரணமே.)

3. முன் + இல் = முன்றில்
இதில் இல் முன் என்பது முன் இல் என மாறி நின்று, இடையில் ஒற்று
வரப்பெற்றது. (இதுவும் வேறு பிரதியில் உள்ள உதாரணமே.)

4. நிலா + கதிர் = நிலவுக்கதிர்
சுறா + தலை= சுறவுத்தலை

(இவையும் வேறு பிரதியில் உள்ள உதாரணங்களே.)