முப்பத்து மூவர்; நூற்றுவரும் ஐவரும் நூற்றைவர் என எண்ணியற் பெயர்த் தொகை வந்தவாறு. இனி வினைத் தொகை வருமாறு : கொல்லும் யானை, கொல்யானை; வெல்லும் படை, வெல்படை என வரும். ஓடுங் குதிரை, ஆடுங் கூத்து, (ஆடுங்) குரங்கு இவற்றைக் காலங்குறித்து 1 வேறு படுக்க. பண்புத் தொகை வருமாறு : நெடியாளும் இவளே, கொற்றியும் இவளே என நெடுங்கொற்றி ஆம்; இவ்வண்ணம் 'குறுஞ்சாத்தன், நெடுங்கடல்' என அளவுப் பண்புத் தொகை வந்தவாறு. வட்டமும் அதுவே பலகையும் அதுவே எனின், வட்டப் பலகை; இவ்வண்ணம் 'சதுரங்கப் பலகை, சுளகு நிலம்' என வடிவுப் பண்புத் தொகை வந்தவாறு. கருங்குதிரை, செம்போத்து என நிறப் பண்புத் தொகை வந்தவாறு. புளிம்பருத்தி, உவரித் தண்ணீர் எனச் சுவைப் பண்புத் தொகை வந்தவாறு. 'பிறவும்' என்றதனால், வெந்நீர், தண்ணீர், இன்றமிழ், நறும்பூ, நுண்ணூல், பருநூல், மெல்லிலை, நல்லாடை என வருவனவுங் கொள்க. இனி உவமைத் தொகை வருமாறு: பவளம் போன்ற வாய், பவள வாய்; மழை போன்ற வண் கை, மழை வண் கை; முத்துப் போன்ற முறுவல், முத்து முறுவல் எனக் கொள்க. இனி அன்மொழித் தொகை வருமாறு : அன்மொழித் தொகையாவது, இரண்டு சொல்லும் பல சொல்லும் தொக்கக்கால், சொற்களை நோக்காதே பொருள் வேறொரு மொழியை நோக்குவது; அது வருமிடத்து, யாவன் அவன் என்றும், யாது அது என்றும், இன்னன பிறவுங் கூறுதல் காண்க. கழுத்தின்கண் ஆடை யாவனுக்கு உண்டு, அவன் கழுத்தாடையாம். தலையின்கண் கல் யாதொன்றினுக்கு உண்டு, அது கற்றலையாம். (7)
1 "வேறுபடுக்க வேண்டா' என்பதுரை பாடம். ஆசிரியர் தொல்காப்பியர் 'வினையின் தொகுதி காலத் தியலும்' என்றமையானும், பின்னூலாரும் 'காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை,' என்றமையானும், காலம் விரிந்துழித் தொகை இன்மையானும், எதிர்காலப் பெயரெச்சம் வேறின்மையானும், அஃதுரையன்று என மறுக்க," என்பது பழைய குறிப்பு.
|