பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 13

          அவ்விரு நூலுள்ளும் ஒருவழி முடிந்த பொருளை ஓர் உபகார
நோக்கி, ஒரு கோவைப்பட வைப்பது
சார்புநூல் ஆகும்;

          என்னை,


          ‘இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
          திரிபுவே றுடையது புடைநூ லாகும்


என்றாராகலின்.

          இனி,
எதிர்நூல் என்பதும் ஒன்று உண்டு. அது யாதோ எனின்,
முதனூலின் முடிந்த பொருளை ஓர் ஆசிரியன் யாதானும் ஒரு காரணத்தாற்
பிறழவைத்தால், அதனைக் கருவியால் திரிவு காட்டி ஒருவாமை வைத்தற்கு,
ஒள்ளியான் ஒரு புலவனால் உரைக்கப்படுவது:

          என்னை,


          ‘தன்கோள் நிறீஇப் பிறன்கோள் மறுப்ப
          தெதிர்நூ லென்ப ஒருசா ரோரே’


என்றாராகலின்.

          அல்லதூஉம்,


 

  ’நூலெனப் படுவது நுதலிய பொருளை
ஆதிக் கண்ணே யறியச் சுட்டி
ஓத்துமுறை நிறுத்திச் சூத்திர நிறீஇ
முதல்வழி சார்பென மூவகை மரபின்
தொகைவகை விரியின் வசையறத் தெரிந்து
ஞாபகஞ் செம்பொரு ளாயிரு வகையிற்
பாவமைந் தொழுகும் பண்பிற் றாகிப்
புணர்ச்சியின் அமைந்தது பொருளகத் தடக்கித்
தனக்குவரம் பாகித் தான்முடி வதுவே’


எனவும் சொன்னாராகலின்.

          அன்றியும்,


 

  ‘நூலெனப் படுவது நுவலுங் காலை
நுதலிய பொருளை முதலிற் கூறி
முதலும் முடிவும் மாறுகோ ளின்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உண்ணின் றமைந்த உரையொடு பொருந்தி
நுண்ணிதின் விளக்க லதுவதன் பண்பே’

 


என்றாராகலானும், இவ்வகை சொல்லப்பட்டது நூல் என்ப.