பக்கம் எண் :
 
148இறையனார் அகப்பொருள்

  ‘அழுது புலம்பியும் நையும் இவள்பொருட் டாகஐய
  தொழுதும் குறையுற்று வேண்டுவல் வாரல்துன் னார்நிணமும்
  இழுதும் மிடைந்தசெவ் வேல்நெடு மாறன்எங் கோன்முனைபோல்
  கழுதும் துணிந்து வழங்கல்செல் லாத கனையிருளே.’        (226)

  ‘பொய்தலை வைத்த அருளொடு பூங்குழ லாள்பொருட்டா
  மைதலை வைத்தவண் பூங்குன்ற நாட வரவொழிநீ
  நெய்தலை வைத்தவை வேல்நெடு மாறனெங் கோன்முனைபோற்
  கைதலை வைத்துக் கழுதுகண் சோரும் கனையிருளே.’       (227)


    இவை தோழிக்கு உரியன.

    இனித், தலைமகட்கு உரியன வருமாறு:

  ‘பணிகொண்டு வாழா தெதிர்ந்து பறந்தலைக் கோடிப்பட்டார்
  துணிகொண்டு பேய்துள்ள வேல்கொண்ட கோன்சுடர்
                                      தோய்பொதியின்
  அணிகொண்ட தாரண்ணல் வாரல் விடர்நின் றரவுமிழ்ந்த
  மணிகொண்டு கானவர் வேழம் கடியும் மயங்கிருளே.’       (228)

      இவ்வகை சொல்லினவிடத்துத் தலைமகன் கேட்பானாயின்
வரைவானாம்; தோழி கேட்பின் வரைவு கடாவுவாளாம்; யாருங்
கேட்பாரில்லையாயின் தானே சொல்லி ஆற்றுவாளாம். இஃது
இரவுக்குறிக்கண்ணதே.

               
இரவினும் பகலினும் நீவருகென்றல்

      ‘இனி, ‘இரவினும் பகலினும் நீவருகென்றலும்’ என்பது; பகற்குறியானும்
இரவுக்குறியானும் வந்தொழுகாநின்ற தலைமகனை இரவும் பகலும் வாவென்று
சொல்லுதல்; அதற்குச் செய்யுள்:

 
‘உரவும் கடல்சூழ் உலகுடை வேந்தன் உசிதன்ஒன்னார்
  பரவும் கழல்மன்னன் கன்னியங் கானற் பகலிடம்நீ
  வரவு மகிழ்ந்திலள் என்தையல் வெய்யோன் மலைமறைந்த
  இரவும் வரவென்ன ஊனம தாம்நின தின்னருட்கே.’         (229)

      இது கேட்டு, ‘இவ்வகை யான் வந்தொழுகப் பொறாது போலும்
இவ்வகை சொல்வாளாயிற்று’ என வரைந்து புகுவானாம் என்பது.

      இனி, ஒருசார் ஆசிரியர் இரவினும் பகலினும் நீ வருக என்றதனை
இரவுவருவானைப் பகல்வருகென்றலும், பகல்வருவானை இரவு வருகென்றலும்
என்றவாறு என்ப. அவற்றுக்குச் செய்யுள் வேறு காட்டுப. அவற்றுள் இரவு
வருவானைப் பகல் வருகென்றதற்குச் செய்யுள்: