இதனுள் தலைவி கனியாகவும், தும்பி தோழியாகவும் அலவன் தன்மேல் தவறிழைக்குந் தமராகவும், தலைவன் இரைதேர் நாரையாகவும் உள்ளுறையுவமங் கொள்வுழித் தலைவி பொருட்டு யாய்க்கு அஞ்சி யொழுகினேன் நீ காத்ததன்றி யான் ஆற்றுவித்தது உளதோவெனத் தலைவன் சிறப்பிற்கு எதிர் தோழி கூறியவாறு காண்க. ‘பண்டும் இற்றே’ என்றது பண்டையின் மிகவும் வருந்தினாளென்றாள். இவன் கண் நீண்டு பசந்தது. களவின்கண் நீங்காது அளியா நிற்கவுஞ் சிறிது கெட்ட அழகின் மிகுதியோ, கள்ளுண்டார்க்குக் கள்அறூஉங் காலத்துப் பிறந்த வேறுபாடு போலுங் காம வேறுபாடோ, அவ்விரண்டும் அல்லவே, இஃது ஓர் அமளிக் கண் துயிலப் பெற்றும் வேதவிதி பற்றிக் கூட்டம் நிகழாமையாற் பிறந்த மிக்க வேறுபாடன்றோ? |