பக்கம் எண் :

2தொல்காப்பியம் - உரைவளம்
 

இளம்பூரணர்
  

இவ்வோத்து    என்ன  பெயர்த்தோவெனின்,  கற்பியல்  என்னும்  பெயர்த்து.  கற்புக்கு  இலக்கணம்
உணர்த்தினமையால்   பெற்ற   பெயர்.  கற்பென்பது  யாதோவெனின்,  அஃதாமாறு   இச்  சூத்திரத்தில்
விளங்கும்.
  

கற்பெனப்.......கொள்வதுவே
  

என்பது சூத்திரம்.
  

இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், கற்பிலக்கணம் கூறுதல் நுதலிற்று.
  

(இ-ள்)  கற்பென்று  சொல்லப்படுவது  கரணத்தொடு  பொருந்திக்  கொள்ளுதற்குரிய மரபினையுடைய
கிழவன் கொள்ளுதற்குரிய மரபினையுடைய கிழத்தியைக் கொடுத்தற்குரிய  மரபினையுடையார்   கொடுப்பக்
கொள்வது என்றவாறு; ‘கொளற்குரி மரபின்’ என்பதனைக் ‘கிழத்தி’ என்பதனோடும் கூட்டியுரைக்க.
  

களவின்     கண்  ஒத்தாரிருவர்  வேட்கை  மிகுதியாற் கூடி  ஒழுகிய வழிக் கரணத்தின் அமையாது
இல்லறம்   நடத்தலாமோ   எனின்,   அஃதாகாதென்றற்குக்   “கரணமொடுபுணர”   என்றார்.   கரணம்
என்பது-வதுவைச்  சடங்கு.  கொளற்குரி  மரபிற்  கிழவோன்  என்றதனால்   ஒத்தகுலத்தானும்  உயர்ந்த
குலத்தானும்  என்று  கொள்க.  கொளற்குரி  மரபிற்  கிழத்தியென்றதனால்  ஒத்த  குலத்தாளும்  இழிந்த
குலத்தாளும்
1  என்று  கொள்க. ‘கொடைக்குரி மரபினோர்’ என்றதனால் தந்தையும்  தாயும்  தன்னையரும்
மாதுலனும்  இவரில்லாத  வழிச்சான்றோரும்  தெய்வமும்
2  என்று  கொள்க.  கொடுப்பக்கொள்வது  கற்பு
என்றமையால் அது கொடுக்குங்கால், களவு வெளிப்பட்ட வழியும் களவு வெளிப்படாத  வழியும்  மெய்யுறு
புணர்ச்சியின்றி உள்ளப்புணர்ச்சியான் உரிமை பூண்டவழியும் கொள்ளப்பெறும் எனக் கொள்க.


1. பிறப்பு குலம்  முதலியவற்றால்  தலைவன்  மிக்கிருத்தல்  அல்லது  தலைவி  மிக்கிருத்தல் ஆகாது
என்பது நோக்கி இழிந்த குலத்தாள் என்றார்.

2. தெய்வம் என்றது வெறியாடலில் தெய்வம்  கூறுவதை  நோக்கி.  கோயிலில்  இறைவன் திருமுன்னர்
மணப்பதை நினைந்து கூறியதாகவும் கொள்ளலாம்.