அவள் கத்தும் ஒலி கேட்டு நீ எழுந்து சென்றது சரியோ? அவள் நின் மார்புப் பசியமாலையை அறுத்தது சரியோ? நீ ‘நான் தீயவனல்லன் தெளிவாயாக’ என்று சொல்லி அவள் சிற்றடியைத் தாழ்ந்து தங்கியது சரியோ? இப்போது சொல் யாம் நின்னைக் கோபியேமோ? 1 பொருள்: பொய்கையில் இரையை வேட்டெழுந்த வாளை மீனை உண்ண வேண்டி நாரையானது தன் அடியின் ஒலியைக் கேட்டு வாளை தப்பி விடுமோ என அஞ்சி மெல்லக் காவலுள்ள வீட்டிற்புகும் கள்வனைப்போல ஒதுங்கிச் செல்லும்படியான நீர்த் துறையுடைய ஊரனோடு நமக்குப்பழி உண்டாயினும் உண்டாக. இனி நாணத்தை நான் கொள்ளல் உண்டோ? எம் சேரியிடத்து அவன் வருக. அவன் மனைவியர் காணுமாறு அவன் மாலையையும் ஆடையையும் பற்றி, ஆரியரின் பெண்யானை பயிற்றியப் பழக்கத்தால் ஆண்யானையைப் பிணித்தாற்போல அவள் மார்பை என் தோள் கந்தாகக் கூந்தலாற்கட்டி என் பாற்கொள்ளவில்லையென்றால் இரந்தோர்க்கு ஈயாது திரட்டி வைத்தவன் பொருள் பயனின்றி மறைவிற் கிடப்பதுபோல என்தாய் காத்து வளர்த்த என் அழகு வெளிப்படாது அழிவதாக. |