16. கொடை ஈண்டியநிரை யொழிவின்றி வேண்டியோர்க்கு விரும்பிவீசின்று. (இ - ள்.) திரண்ட பசுநிரையொன்றும் தப்பாமே தம்மை வேண்டினவர்களுக்குப் பிரியப்பட்டுக் கொடுத்தது எ - று. வ - று.அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண் வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கட் செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி வரிச்சிலையாற் றந்த வளம். (இ - ள்.) அழகிய கண்ணாற் சிறந்த கிணையையுடையவனும் துடிகொட்டுமவனும் பாணிச்சியும் பாணனும் வெவ்விய கள்ளிற்குக் கொடுக்கும் விலையாகும், சிவந்த கண்ணினையுடையராய்ப் போர்க்கு இடையாத மன்னர் பூசன்முகத்துக் கோபித்து வரிதலையுடைய வில்லாலே கொண்ட ஆனிரையாகிய செல்வம் எ - று. வளம் வெங்கட்கு வீசும் விலையாகுமெனக் கூட்டுக. (16) 17. புலனறி சிறப்பு வெம்முனைநிலை யுணர்த்தியோர்க்குத் தம்மினுமிகச் சிறப்பீந்தன்று. (இ - ள்.) வெவ்விய வேற்றுப்புலத்தினதுநிலைமையை அறிவித்தார்க்குத் தம்முடைய கூற்றினும் பெருகச் சிறப்புக் கொடுத்தது எ - று. வ - று.இறுமுறை யெண்ணா திரவும் பகலும் செறுமுனையுட் சென்றறிந்து வந்தார் - பெறுமுறையின் அட்டுக் கனலு மயில்வேலோ யொன்றிரண் டிட்டுக் கொடுத்த லியல்பு. (இ - ள்.) தாம் இறும்வகையை ஆராயாதே இரவின் கண்ணும் பகலின் கண்ணும் கொல்லும் பகைப்புலத்துப் போய் ஆராய்ந்துவந்தார் பெறக்கடவ பங்கின்மேலும் கொன்று எரியும் கூர்வேலினையுடையோய், ஒன்றாதல் இரண்டாதல் பசு ஏற்றிக்கொடுத்தல் முறைமை எ - று. (17) 18.1பிள்ளைவழக்கு பொய்யாது புண்மொழிந்தார்க்கு வையாது வழக்குரைத்தன்று. (இ - ள்.) தப்பாமல் நிமித்துஞ் சொன்னோர்க்கு வஞ்சியாதே பெறும் முறைமையைச் சொல்லியது எ - று.
1. கரும்பிள்ளை நிமித்தங் கூறியார்க்கு விதந்து கொடுத்தல்; இ-வி. சூ. 603, உரை. |