பக்கம் எண் :

(இ - ள்.) கோபித்தெழும் அரசராகிய பகைவர்தம்முடைய நிலைமையை உறவாக்கி மீண்ட அன்பர்தம்தேர் வந்தபடியைச் சொல்லியது எ-று.

வ - று. தீர்ந்து வணங்கித் திறையளப்பத்தெம்முனையுள்
ஊர்ந்துநங் கேள்வ ருழைவந்தார் - சார்ந்து
பரிகோட்ட மின்றிப் பதவார்ந் துகளும்
திரிகோட்ட மாவிரியத் தேர்.

(இ - ள்.) ஒன்னார் தம் பகையையொழிந்து பணிந்து திறைகொடுப்பப் பகைமுனையுட் செலுத்தி நம்முடைய கொழுநர்பக்கத்தே வந்தார்; ஒன்றோடொன்று கூடிச்செலவுவளைவின்றிச் செங்கோலறுகை அருந்திப் பாயும் வளைந்தகொம்பினையுடைய கலை கெட்டோடத் தேரினை எ-று.

தேர் ஊர்ந்து நங்கேள்வர் உழைவந்தாரென்க.

278. நாண்முல்லை

செறுநர் நாணச் சேயிழை யரிவை
வறுமனை வைகித் தற்காத் தன்று.

(இ - ள்.) பகைவர் நாணச் சிவந்த ஆபரணத்தினையுடையமடந்தை கணவன் பிரிந்த இல்லிலே தங்கித் தன்னைப் பரிகரித்தது. எ-று.

வ - று. கொய்தார மார்பிற் கொழுநன்றணந்தபின்
பெய்வளை யாட்குப் பிறிதில்லை- வெய்ய
வளிமறையு மின்றி 1வழக்கொழியா வாயில்
நளிமனைக்கு நற்றுணை நாண்.

(இ - ள்.) மட்டஞ்செய்த மாலையாற் சிறந்தமார்பினையுடைய கணவன் பிரிந்தபின்பு இட்ட தொடியினையுடையாட்கு வேறொரு காவலுமில்லை; இடக் கதவுமின்றியே யாவரும்இயங்குதலொழியாத வாயிலையுடைய பெரிய மனைக்கு நல்லதுணைமை நாணே எ-று.

(4)

கொய்தாரமார்பென்றவழி,அகரம்சாரியை.

279. இல்லாண் முல்லை

கழுமிய காதற் கணவனைப் பழிச்சி
இழுமென் சீர்த்தி யின்மலி புரைத்தன்று

(இ - ள்.) பொருந்திய காதற்கணவனைவாழ்த்திப் பலரும் இசைக்கும் அனுகரணத்தினையுடையகீர்த்தியாற் சிறந்த இல்லின்மிகுதியைச் சொல்லியது எ-று.

வ - று. கல்லெனீர் வேலிக் கணவன் கழல்வாழ்த்தி
2ஒல்லும் வகையால் விருந்தோம்பிச்-செல்லுந்தம்
இற்செல்வ மன்றி யிரந்தவர்க் கீகல்லாப்
புற்செல்வம் பூவா புகழ்.


1. மதுரைக். 356. 2. குறள், 33.