பக்கம் எண் :

298. மெலிவொடு வைகல்

மணிவளை நெகிழ மாநலந் தொலைய
அணியிழை மெலிவி னாற்றல் கூறின்று.

(இ - ள்.) மாணிக்கத்தொடி கழலப் பெரிய அழகுகெட அழகிய ஆபரணத்தினையுடையாளது தளர்ச்சியின் வலிமையைச் சொல்லியது எ-று.

வ - று. பிறைபுரை வாணுதல் பீரரும்ப மென்றோள்
இறைபுனை யெல்வளை யேக - நிறைபுணையா
யாம நெடுங்கட னீந்துவேன்
காம வொள்ளெரி கனன்றகஞ் சுடுமே.

(இ - ள்.) இளமதியை யொத்த ஒளிநுதல் பீர்போலப்பசப்புத்தோற்ற மெத்தென்ற தோளின் முன்கையில்அணிந்த இலங்கு தொடி ஓட நிறையே தெப்பமாக யாமமாகிய பெரியகடலை நீந்தாநிற்பேனாயினும், ஆசையென்னும் ஒள்ளிய நெருப்பு அழன்று நெஞ்சை எரிக்கும் எ-று.

(5)

299. காண்டல் வலித்தல்

மைவரை நாடனை மடந்தை பின்னரும்
கைவளை சோரக் காண்டல் வலித்தன்று

(இ - ள்.) மேகத்தைப் பொருந்தின மலைநாடனைமடவாள் இரண்டாவதும் கையில் வளைசோர்கையாலே காணவேண்டுமென்றலை நிச்சயித்தது எ-று.

வ - று. வேட்டவை யெய்தி விழைவொழிதல்பொய்போலும்
மீட்டு மிடைமணிப் பூணானைக் - காட்டென்று
1மாமை பொன்னிறம் பசப்பத்
தூமலர் நெடுங்கண் டுயிறுறந் தனவே.

(இ - ள்.) விரும்பினவற்றைப் பெற்று ஆசைப்பாடு நீங்குமது பொய்யே போலும்; இரண்டாவதும் செறிந்தமணியாற் சிறந்த ஆபரணத்தினையுடையானைக் காட்டுகவென்று சொல்லிமேனி பொன்னிறம் போலப் பசப்பத் தூமலர்போன்ற நெடிய விழிகள் உறக்கத்தை ஒழிந்தன எ-று.

கண், காட்டென்று துயில் துறந்தனவென்க.

(6)

300. பகன்முனிவுரைத்தல்

புரிவளை நெகிழப் புலம்பொடு நின்றோள்
பருவர லுள்ளமொடு பகன்முனி வுரைத்தன்று.

(இ - ள்.) முறுக்குவளை சோரத் தனிமையுடனே நின்ற தலைவி துயரமிக்க உள்ளத்தோடே பகற்பொழுதை வெறுத்தபடியைச் சொல்லியது எ-று.


1. மாமை பசத்தல் : குறுந். 27 : 4-5.