பக்கம் எண் :

வ - று. தன்க ணளியவாய் நின்றேற்குத் தார்விடலை
வன்கண்ண னல்கா னெனவாடும் - என்கண்
இடரினும் பெரிதா லெவ்வம்
படரினும் பெரிதாற் பாவியிப் பகலே.

(இ - ள்.) தன்னிடத்து அருளை ஆசைப்பட்டுநின்ற எனக்கு மாலையினையுடைய தலைவன் தறுகண்ணன் அருளானெனச் சொல்ல மெலியும் என்னிடத்து வருத்தத்திலும் பெரியதொன்றால், மானம்; என்னுடைய நினைவிலும் பெரிதால், பாவியான இப்பகற்பொழுது எ-று.

(7)

301. இரவுநீடு பருவரல்

புலம்பொடு வைகும் பூங்குழை கங்குற்
கலங்கினேன் பெரிதனக் கசிந்துரைத் தன்று.

(இ - ள்.) தனிமையுடனே தங்கும் பொலிந்த குழையினை யுடையாள் இரவின்கண் மனமயங்கினேன் பெரிதெனச் சொல்லி நெகிழ்ந்து சொல்லியது எ-று.

வ - று. பெண்மே னலிவு பிழையென்னாய் பேதுறீஇ
விண்மே லியங்கு மதிவிலக்கி - மண்மேல்
நினக்கே செய்பகை யெவன்கொல்
எனக்கே நெடியை வாழிய ரிரவே.

(இ - ள்.) பெண்பாலிடத்து நெருக்கும் நெருக்குத் தப்பென்றுபாராய், அறிவின்மையுற்று ஆகாசத்திடத்தே உலாவுமதியைப் போகாதபடி விலக்கி; பூமியிடத்து நினக்கு யான்செய்த மாறுபாடு எவன்கொலோ? எனக்கே நீ நெடியையாயிருந்தாய்; வாழ்வாயாக, இரவுப்பொழுதே எ-று.

(8)

302. கனவின் அரற்றல்

ஒண்டொடி மடந்தை யுருகெழு கங்குலிற்
கண்டவன் கரப்பக் கனவி னரற்றின்று.

(இ - ள்.) ஒள்ளிய வளையினையுடைய தலைவி அஞ்சுதல் பொருந்திய இரவுப்பொழுதிடத்துக் கண்ட தலைவன்ஒளிப்பக் கனவின்கண் வாய்விட்டுப் புலம்பியது எ-று.

வ - று. அயர்வொடு நின்றே னரும்படர்நோய்தீர
நயம்வரும் பள்ளிமே னல்கிக் - கயவா
நனவிடைத் தமியேன் வைகக்
கனவிடைத் தோன்றிக் கரத்தனீ கொடிதே.

(இ - ள்.) மயக்கத்தொடு நின்றேனுடைய அரிய நினைவினால் வந்த நோய் நீங்க நன்மையுண்டாம்சயனத்தின்மேல் எனக்கருளி, கீழ் மகனே, நனவின்கண்ணே தனியேனாகி யான் தங்கக் கனவினிடத்தே தோற்றி நீ மறைந்துபோவது கொடிதாயிருந்தது எ-று.

(9)