பக்கம் எண் :

361. பிடி வென்றி

வ - று. குவளை நெடுந்தடங்கட் கூரெயிற்றுச்செவ்வாய்
அவளொடு மாமை யொப்பான் - இவளொடு
பாணியுந் தூக்கு நடையும் பெயராமைப்
பேணிப் பெயர்ந்தாள் பிடி.

(இ - ள்.) செங்கழுநீர்மலரை யொத்த நெடியபெரிய கண்ணினையும் கூரிய எயிற்றினையும் சிவந்த வாயினையுமுடைய சீதேவியுடன் நிறமொத்த இவளோடு தாளமும் இசையும் செலவும் தப்பாதபடி பரிகரித்துப் பிடிபோல அசைந்து பெயர்ந்து ஆடுங் கூத்தை ஆடினாள் எ-று.

இனிப் பெயர்த்தாளென்றுபாடமோதிப் பிடியை நடத்தினாளென் பாருமுளர்.

(19)

ஒழிபு முற்றும்.


ஆகப்பட்டு 361.
(சூத்திரம் 19.)

வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
உட்குடை யுழிஞை நொச்சி தும்பையென்
றித்திற மேழும் புறமென மொழிப
வாகை பாடாண் பொதுவியற் றிணையெனப்
5போகிய மூன்றும் புறப்புற மாகும்.
ஐயனாரிதனார் பாடிய புறப்பொருள் வெண்பாமாலை
மூலமும் உரையும் முற்றப்பெற்றன.