358. சூதுவென்றி வ - று.1கழகத் தியலுங் கவற்றினிலையும் அழகத் திருநுதலா ளாய்ந்து - புழகத்து பாய வகையாற் பணிதம் பலவென்றாள் ஆய வகையு மறிந்து. (இ - ள்.) சூதின் இயல்பையும் கவற்றினுடைய நிலையையும் பனிச்சையையுடைய திருநுதலினையுடையாள் ஆராய்ந்து புகழினையுடைய மனையிடத்து உபாயவகையால் சூதுபொர ஒட்டின பலவும் வென்றாள், ஆதாயத்தின் கூறுபாட்டையுமறிந்து அறிந்து பல வென்றாள். எ-று. புகழென்பதன்கண் ககரம் விகாரத்தாற்றொக்கது. (16) 359. ஆடல் வென்றி வ - று.1கைகால் புருவங்கண் பாணிநடைதூக்குக் கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு - பெய்பூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடும் தொடுகழன் மன்னன் றுடி. (இ - ள்.) கையாலும், காலாலும், புருவத்தாலும், கண்ணாலும், தாளத்தையும் செலவையும் இசையையும் கொய்யப்பட்ட பூங்கொம்பன்னாள் கருதிக்கொண்டு சூடியபூவில் மிக்க களிப்பினையுடைய வண்டு ஆரவாரிப்பச் செறிந்தவளையினையுடையாள் நின்று ஆடும், கட்டுங்கழல் வேந்தனுக்குத்துடிக்கூத்தை எ-று. (17) 360. பாடல் வென்றி வ - று.1வண்டுறையுங் கூந்தல்வடிக்கண்ணாள் பாடினாள் வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக்- கண்டறியக் கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையாழ் அந்நரம்பு மச்சுவையு மாய்த்து. (இ - ள்.) வண்டு தங்கும் கூந்தலினையும் மாவடுவகிர்போன்ற கண்ணினையுமுடையாள் பாடினாள்; வெண்டுறைப்பாட்டும் செந்துறைப்பாட்டும் வேறுபாடு தோன்ற, அறிவர் மனத்தாற்கண்டறியக் கின்னரத்தின் ஓசைபோல, இணை கிளை பகைநட்பு இனமென்னும் வகையின் ஐந்தாவதாகிய கிளைத்தொடர்ச்சியமைந்த தித்தித்த கோவையினையுடைய யாழிற் செய்யப்பட்டஅழகிய 2நரம்பும் மந்திர மத்திம தாரமும் ஆராய்ந்து எ-று. ஆராய்ந்து பாடினாள். செந்துறையென்பது ஓசை குறித்தது. (18)
1. தொல். புறத். சூ. 16, இளம்; சூ. 20, ந. மேற். (பி- ம்)2. 'நரம்பு மந்தரசமு மத்திமாதாரகமுமாராய்ந்து' |