(இ - ள்.) பிரியத்தோடு நாவினாலே பூவையானது வகுத்துப் பெரியவான சொல்லுதற்கரிய வார்த்தைகளைச் சொல்லும்; தெரிந்தவளையினையும் விளர்த்த எயிற்றினையும் சிவந்த வாயினையும் செவ்வரி கருவரியாற் சிறந்த மையுண்ட கண்ணினையு முடையாள் தான் வளர்த்தகிளி சொன்ன வார்த்தைகளைக் கிழித்துக் கீழ்ப்படுத்தி எ-று. கீண்டிட்டுப் பேசும். (12) 355.குதிரை வென்றி வ - று.1ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும் கந்து மறமுங் கறங்குளைமா- முந்துற மேல்கொண் டவைசெலீஇ வென்வேலான் மேம்பட்டான் வேல்கொண்ட கண்ணாளை மீட்டு. (இ - ள்.) விக்கிதம் வற்கிதம் உபகண்டம் ஜவம் மாஜவம் என்னும் இப்பஞ்சதாரையையும் பதினெட்டுவகைப்பட்ட சுற்று வரவினையும் கழியப் பாய்தலையும் கறுவுதலையும் ஒலிக்குந் தலையாட்டத்தினையுமுடைய குதிரையை முந்துற மேல்கொண்டு முன்பு சொன்னவற்றைச்செலுத்தி வெற்றிவேலைக்கொண்டு மேம்பட்டான், பிறரைவென்று வெற்றிமகளைத் தன்னிடத்து மீட்டுக்கொண்டு எ-று. (13) 356.தேர்வென்றி வ - று. ஒலிமணித் திண்டே ருடையாரை வெல்லும் கலிமணித் திண்டேராற் காளை- கலிமாப் பலவுடன் பூட்டிப் படர் சிறந்தைந்து செலவோடு மண்டிலஞ் சென்று. (இ - ள்.) ஒலிக்கும் மணியையுடைய திண்ணிய தேரினையுடையபகைவரை வெல்லும், ஆரவாரிக்கும் மணிகளையுடைய திண்ணிய தேராலே காளையானவன்; மனவெழுச்சியையுடைய குதிரை பலவும் ஒக்கப் பூட்டிச் செல்லுதல் மிக்க பஞ்சதாரையுடனே பதினெட்டுச்சுற்று வரவும் அமர்ந்து எ-று. சென்று வெல்லும். (14) 357.யாழ்வென்றி வ - று. பாலை படுமலை பண்ணி யதன்கூட்டம் கோலஞ்செய் சீறியாழ் கொண்டபின்- வேலைச் சுவையெலாந் தோன்ற வெழீஇயினாள் சூழ்ந்த அவையெலா மாக்கி யணங்கு. (இ - ள்.) படுமலைப்பாலையையும் அல்லாத பாலைகளையும் ஆக்கி அழகு செய்த சிறிய யாழைத் தன் கையிலே கொண்டபின்பு, முன்பு சொன்ன திரிபாலைத்திறமெல்லாம் அமுதச்சுவைதோன்ற வாசித்தாள், சுற்றிய அவையினுள்ளாரையெல்லாம் தன்வசத்தாராக்கி அணங்கு எ-று. அணங்கு எழீஇயினாள். (15)
1. மதுரைக். 389, ந; சீவக. 784. |