நலம்வர நாடி நடுங்காது நூற்கட் புலவரா லாய்ந்தமைத்த பூழ். (இ - ள்.) நூற்பழக்கமின்றியே சொல்லும் குறும்பூழாடிகள் வேண்டிற்றுச் சொல்லுக, சொல்லுமிடத்துச் சொல்லக்கடவ பல மந்திரமுள, அவற்றைச் சொன்னபின் வென்றிபெறும்; நன்மையுண்டாக ஆராய்ந்து கலங்காது நூலிடத்து அறிவுடையாரால் இலக்கணம் ஆராய்ந்து மதித்த பூழ் எ-று. சொல்லக்கடவ மந்திரம் பலவாவன: தீற்றும் அரிசி ஓதுமந்திரமும் பச்சிலை பிசைந்துதடவும்போது சொல்லுமந்திரமும், செவியுள்ளுறுத்து மந்திரமும் (9). 352. 1சிவல்வென்றி வ - று. ஒட்டியா ரெல்லா முணரார்புடைத்தபின் விட்டோட வேண்டுமோ தண்ணுமை - விட்ட சுவடேற்கு மாயிற் சுடரிழாய் சோர்ந்து கவடேற்க வோடுங் களத்து. (இ - ள்.) சபதங் கூறும் சிவலினையுடையாரெல்லாம் அறியார்; எதிர்ச்சிவலைத் தாக்கிய பின்பு தண்ணுமையைக் கைவிட்டோட வேண்டுமோ, இந்தச்சிவல் வந்தபொழுதே இதனுக்கு அஞ்சி ஓடவமையும்; இவர் பொரவிட்டவற்றுள் ஏன்றொன்று எதிர்க்குமாயின், விட்டுவிளங்கும் ஆபரணத்தினையுடையாய், வருந்தி இதன் கவட்டினுட் புகுந்து கண்டோர் நகைக்க ஓடுங் களத்திடத்து எ-று. ஆதலால் விட்டோட வேண்டுமோ தண்ணுமை. (10) 353. கிளிவென்றி வ - று. இலநா முரைப்பதன்க ணெல்வனைநாணப் பலநாள் பணிபதமுங் கூறிச் - சிலநாளுள் பொங்கரி யுண்கணாள் பூவைக்கு மாறாகப் பைங்கிளியைக் கற்பித்தாள் பாட்டு. (இ - ள்.) நாம் அதனிடத்து இகழ்ந்து சொல்லுஞ் சொல் இல; விளங்கும் வளையினையுடையாய், நீ நாணப்பலநாளும் தாழ்ந்த சொற்களையுங்கூறிச் சிலநாளுள்ளே மிக்க செவ்வரியினையுடைய மையுண்ட கண்ணாள் நம் பூவைக்கு மாறுபடத் தன் பசுங்கிளியைப் பாட்டைக் கற்பித்தாள் எ-று. நாமுரைப்பு இல. (11) 354. பூவை வென்றி வ - று. புரிவொடு நாவினாற் பூவைபுணர்த்துப் பெரிய வரியவை பேசும் - தெரிவளை வெள்ளெயிற்றுச் செவ்வாய் வரியுண்க ணாள்வளர்த்த கிள்ளை கிளந்தவைகீண் டிட்டு.
1. பட்டினப் . 77, ந. |