பக்கம் எண் :

261

பொருளையும் உணர்த்துவன எல்லாம் பெயர்ப் பகாப்பதம். எல்லாம் பொருள் என்றற்கு ஒரோவழி உரிமை உடைமையின், அக்கருத்தான் ஈண்டுப் பண்பும் தொழிலும் பொருள் எனப்பட்டன.

நட வா உண் தின் இத்தொடக்கத்தன வினைப் பகாப்பதம், மன் மற்று அம்ம இத்தொடக்கத்தன இடைப் பகாப்பதம். சால உறு தவ இத்தொடக்கத்தன உரிப் பகாப்பதம் பிறவும் அன்ன.

பகாஅப்பதம் பகுக்கப்படாத அளவின்கண்ணே மிக்குச்செல்லும் எனவே அவன் அவள் அவர் தமன் தமள் தமர் என்றாற்போல்வன ஈறு பகுக்கப்படினும் பகுதி வேறு பொருள்படாமையின் அங்ஙனம் வரும் இயல்பின் கண்ணும், சாத்தை உடையான் சாத்தன், கொற்றை உடையான் கொற்றன் என்றாற்போல ஈறு பகுக்கப்பட்டுப் பகுதி வேறு பொருள்படினும் சாத்தன்கொற்றன் என இடுகுறி மாத்திரையாயே நிற்பின் அவ்வாறு நிற்கும் இயல்பின் கண்ணும். கங்கைகொண்ட சோழபுரம், சோழன்நலங்கிள்ளி, பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவகுதி என்றாற்போல்வன நிலை மொழி வருமொழியாகப் பகுக்கப்பட்டுப் பல பொருள் உணர்த்தினும், தொன்றுதொட்டு ஒருபிண்டமாய் ஒரு பொருளையே உணர்த்தி நிற்றலின் அங்ஙனம் நிற்கும் இயல்பின்கண்ணும் சிறுவரவிற்றாய் நடக்கும் எனக் கொள்க.

இன்னும் சாத்தன் சாத்தி முடவன் முடத்தி என்றாற் போலும் விரவுப்பெயர்கள் பகுதிவிகுதியாய்ப் பகுக்கப்படினும், விகுதிவகையான் உயர்திணை ஒருமையே அன்றி அஃறிணை ஒருமையும் உணர்த்தும் என்றற்கு ஒத்து இலாமையான், உணர்திணையோடு அஃறிணை விரவிவரும் விரவுப் பெயர்க்கண்ணும் பகாப்பதம் சிறுவர விற்றாக நடக்கும் எனக் கொள்க. 3