பக்கம் எண் :

524

இ-ள்: ஒன்று முதலாக எட்டு ஈறாகக் கிடந்த எழுவகை எண்களின் முன்னர் வரும் பத்து என்னும் எண் இடை நின்ற தகர ஒற்று ஒருகால் கெடுதலும் ஒருகால் ஆய்தமாகத் திரிதலும் என்னும் இவ்விரு செய்கையும் பொருந்தும் என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.

வரலாறு: ஒருபது ஒருபஃது, இருபது இருபஃது முப்பது முப்பஃது, நாற்பது நாற்பஃது ஐம்பது ஐம்பஃது, அறுபது அறுபஃது, எண்பது எண்பஃது எனவரும். 61

விளக்கம்

நிலைமொழித்திரிபு 106 முதல் 111 ஈறாகிய நூற்பாக்களில் கூறப்பட்டுள்ளது. ஏழ் என்பது ழகர ஈற்று மொழியாதலின், அதுபற்றிய செய்தி மெய்யீற்றுப் புணரியலில் கூறப்பெறும், பத்து என்பதன் தகர ஒற்றுக் கெட்டு ஆய்தம் ஆகும் எனவே. பஃது என்ற வருமொழி நின்றாங்கு நின்றே புணரும் என்பதும் கொள்க.

ஒத்த நூற்பாக்கள்:

‘ஒன்றுமுதல் ஒன்பான் இறுதி முன்னர்
நின்ற பத்தன் ஒற்றுக்கெட ஆய்தம்
வந்திடை நிலையும் இயற்கைத்து என்ப
கூறிய இயற்கை குற்றிய லுகரம்
ஆறன இறுதி அல்வழி யான.’           தொல். 437

‘முதல்இரு நான்காம் எண்முனர்ப் பத்தின்
இடைஒற்று ஏகல் ஆய்தம் ஆகல்
எனஇரு விதியும் ஏற்கும் என்ப.’           நன். 195

‘ஒன்று முதல்ஒன் பான்முன் பத்திடை
மெய்கெட ஆய்தம்ஆறு அல்லா வழியே.’           மு. வீ. பு. 260