பக்கம் எண் :

526

ஒன்று+பத்து+ஒன்று-ஒருபத்தொன்று எனப்பத்தின் தகரம் கெடாது குற்றியலுகரம் வருமொழி உயிர் ஏறு இடங் கொடுத்தது.

ஒன்று-பஃது + ஒன்று - ஒருபத்தொன்று என ஆய்தம் கெட நின்ற ஒருபது என்பதன் இறுதிக்குற்றிய லுகரம் உயிர் ஏற இடம் கொடுத்தது; தகரம் இடையே மிக்கது.

ஈண்டும் ழகரஈற்று எண்ணுப் பெயராகிய ஏழ் என்பதனை விடுத்து ஏனையவே கொள்ளப்படும்.

ஒத்த நூற்பாக்கள்:

‘ஒன்றுமுதல் ஆகிய பத்தூர் கிளவி
ஒன்றுமுதல் ஒன்பாற்கு ஒற்றுஇடை மிகுமே
நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும்,’           தொல். 475

‘ஒருபஃது ஆதிமுன் ஒன்றுமுதல் ஒன்பான்
எண்ணும் அவைஊர் பிறவும் எய்தின்
ஆய்தம் அழியஆண்டு ஆகும் தவ்வே.’           நன். 196

‘ஒன்றுமுதல் ஆகிய பத்துஊர் கிளவி
ஒன்று முதல் ஒன்பாற்கு ஒற்று இடைமிகுமே.’           மு. வீ. பு. 295

பத்து, ஒன்பது முன் எண்ணுப்பெயர்
முதலியன

115. ஒன்றுமுதல் ஈரைந்து ஆயிரம் கோடி
எண்நிறை அளவும் பிறவரின் பத்தின்
ஈற்றுஉயிர் மெய்கெடுத்து இன்றும் இற்றும்
ஏற்பது ஏற்கும் ஒன்பதும் இனைத்தே.

இது சில எண்ணுப்பெயரொடு சில எண் ஆதி நாற் பெயரும் வந்து புணருமாறு கூறுகின்றது.