முதல் சினைக்கிளவிக்கண் இரண்டாவதும் ஏழாவதும் பொதுவாக மயங்கும் என்ற கருத்தை நியமிப்பதற்கு இந்நூற்பா எழுந்துள்ளது. முதற்கு ஐ வருமிடத்துச் சினைக்குக்கண் வரும். முதற்கு அது வருமிடத்துச் சினைக்கு ஐ வரும். சிறுபான்மை இரண்டன்கண்ணும் ஐ வரும். இந்நிலை பண்பிபண்புத்தொடர்பிலும், தொழில்செய்வோன்தொழில் தொடர்பினும், பொருள் -பொருள் தொடர்ச்சித் தொடர்பிலும் வரும் என்பனவும், மூன்றாவதற்கு ஓதிய ஒருவினை ஒடுச்சொல் உயர்பொருளைச் சார்ந்தே வரும், உயர்திணைக்கண் ஆறாம் வேற்றுமைப் பொருளில் நான்காவதே வரும் என்பனவும் கூறப்பட்டுள்ளன. சாத்தனது புதல்வன் என ஆறாவது விரிப்பின், அது அஃறிணையைக் காட்டலின் புதல்வன் என்ற உயர்திணைப் பெயரொடு பொருந்தாது ஆதலின், ஆறாவதனை விரிக்காது நான்காவதனையே விரிக்க என்பதாம். |