இது வேற்றுமை உருபு ஏற்புழிப் படுவதுஒரு வரையறையும் வேற்றுமைப் பகுதிக்கு ஏற்பதொரு புறனடையும் உணர்த்துகின்றது. இ-ள்: முதற் சொல்லும் சினைச் சொல்லுமாக தொடர்ந்தவழி முதற்சொற்கண் இரண்டாவது வரின் ஏழாவது சினைச்சொற்கண் வருதலும், ஆறாவது முதற் சொற்கள்வரின் சினைச் சொற்கண் இரண்டாவது வருதலும், இத்தன்மையன பிறவும் ஆராய்ந்து அறிதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு, வரலாறு: யானையைக் கோட்டின்கண் குறைத்தான் எனவும், யானையது கோட்டைக் குறைத்தான் எனவும் வரும். இனி, ‘இனையவை பிறவும்’ என்றதனானே, யானையைக் கோட்டைக் குறைத்தான் என ஈரிடத்தும் இரண்டாவதே வருதலும், இவ்வாறே மணியை நிறத்தின்கண் கெடுத்தான்- மணியது நிறத்தைக் கெடுத்தான்- மணியை நிறத்தைக் கெடுத்தான்- எனப் பண்புபற்றி வருதலும், தலைமகனைச் செலவின்கண் அழுங்குவித்தல்- தலைமகனது செலவை அழுங்குவித்தல்-தலைமகனைச் செலவை அழுங்குவித்தல்- எனத்தொழில் பற்றி வருதலும், சாத்தனை நூலை ஓதுவித்தான்- யாற்றை நீரை விலக்கினான்- எனப் பொருள் தொடர்ச்சி பற்றி வருதலும், அரசனொடு இளையார் வந்தார்- ஆசிரியனொடு மாணாக்கர் வந்தார்- என உயர்பொருளும் இழிபொருளும் பற்றி மயங்கி வந்துழி. |