வினைகொண்டு முடியுமாறு விளக்கப்பட்டது. என என்பதற்குக்கூறிய செய்தியே என்று என்பதற்கும் கொள்ளப்பட்டது.இசை, குறிப்பு, சொல் பற்றிய எச்சங்கள் தம்பொருளை வேற்றுச் சொற்களைக் கொணர்ந்து முடிப்பனவாம். சொல்லெச்சம் அடுத்த நூற்பாவில் விளக்கப்படும். என்னை மறைத்திரோ- என்னை என்பது ‘நும்மொடு யாதும் இயைபில்லாத என்னை’ எனவும், நின்னை யான் அகன்று- ‘உயிரினும் சிறந்த நின்னை’ ‘இருதலைப்புள்ளின் ஒர் உயிரேன் ஆகிய யான்’ எனவும் பொருள் படுதல் பல சொற்களைக் கொணர்ந்து பொருள் விளக்கும் இசையெச்சமாம். இசை எச்சத்தை அலங்கார நூலார் ‘காகு’ என்பர். அதற்கு உதாரணம் ‘நுமர் உள்ளல் என்னை மறைத்திரோ’ என்பதாம். (‘எம்மை’ என்பது பரிமேலழகர் பாடம்) அது சொல்லுங்கால் முகவிகாரமாதல் சொல்விகாரமாதல் தோன்ற நிற்கும் என்பது பிரயோகவிவேகம் (50) உரை. ‘அதுபோல’- நீத்தார்க்கே தவறு’- என இரு சொற்கள் மறைந்து நிற்பன இசையெச்சம் என்பர் சேனாவரையர். ‘உண்டார்கண்’- ‘கண்ணுளார்’- என்ற குறள்களில் குறிப்பெச்சம் உண்மை விளக்கப்பட்டது. ‘பசப்பித்துச் சென்றாரை’- ‘இளைதாக’- என்பன குறிப்பெச்சத்திற்குச் சேனாவரையர் காட்டியன. இசை, குறிப்பு, சொல் என்ற மூன்று எச்சங்களும் குறிப்பால் போந்த பொருள் கொண்டு வெளிப்படும் என்பதாம். ‘தும்முச்செறுப்ப........என்று’ என்பதன்கண் உள்ள இசையெச்சம் அச்சொல்லிலேயே பொதிந்து கிடப்பினும் |